tamilnadu

img

போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்து பாஜக கும்பல் வன்முறை... தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம்

சென்னை:
போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்து  வன்முறையில் ஈடுபட்டு அராஜகம் புரிந்த பாஜக கும்பலின் செயலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது.இவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. அன்பரசு, மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 30-11-2020 அன்று, இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமர் படம் வைக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக கட்சியினர் அலுவலகத்தில் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி பிரதமர் படம் வைக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதை ஏற்க  மறுத்த பாஜகவினர்  அலுவலகத்தில் புகுந்து  வட்டாரவளர்ச்சி அலுவலர் மற்றும் அங்கு பணி புரியும் ஊழியர்களை தாக்க முயற்சித்தும், வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் அரசு வாகனத்தை எட்டி உதைத்து வாகனத்தை சேதப்படுத்தி,  வாகனத்தில் ஏறி  அரசு முத்திரையையும் உடைத்துள்ளனர். இச்சம்பவத்தால் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பாதுகாப்பற்ற சூழலில், அச்சத்துடன் உயிருக்குப் பயந்து அரசு பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறான சம்பவத்தால்  அரசு ஊழியர்கள் மத்தியில் அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை  முன்னிலையிலேயே அத்துமீறி அராஜகமான செயலில்  பாஜக கட்சியினர் ஈடுபட்டுள்ளது  அராஜகத்தின் உச்சம்.இதைக் கண்டித்து ஊரக வளர்ச்சித் துறை சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 1 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இக்காலத்தில் கொரோனா பெரும்தொற்று தடுப்புப் பணியில் தமிழகத்தில் கடந்த  8 மாதமாக உயிரை துச்சமென மதித்து ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள்  முன் களப்பணி ஊழியர்களாக மக்களுக்கான சேவைப்பணிகளை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள்.      

இவ்வாறு பணி செய்து கொண்டு இருக்கும் ஊழியர்கள் மீது இராமநாதபுரம் மாவட்டம் ,போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட பாஜக கட்சியினரை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையில் ஈடுபட்டு அத்துமீறி அராஜகச் செயல்களில் ஈடுபட்ட பாஜக கட்சியினர் மீது தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அரசியல் கட்சிகளின் தலையீட்டை தடுத்து நிறுத்தி அரசு ஊழியர்கள் அரசு பணியை முழுமையாக செய்திட, பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;