tamilnadu

img

வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்: தேசம் வாழ களம் காணும் போராட்டம் -சு.வெங்கடேசன் எம்பி

வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் என்பது  தேசம் வாழ களம் காணும் போராட்டமாகும். எனவே வங்கி நிர்வாகங்களின் மிரட்டலை அச்சுறுத்தலை அனுமதியோம் என்று  சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது  முகநூல் பதிவில் கூறியதாவது:-

டிசம்பர் 16, 17 இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு (UFBU) வேலை நிறுத்தத்திற்கான வேண்டுகோளை விடுத்துள்ளது.

உடமையாளர்கள் கொண்டுள்ள அக்கறையை விட தொழிலாளர்கள் நிறுவனத்தின் மீது அதிக அக்கறையோடு இருக்கிறார்கள்.

இரண்டு அரசு வங்கிகள் தனியார் மயமாகும் என்று அறிவித்த "உடமையாளர்" அரசாங்கம் உலக, உள்ளூர் நிதித் துறையின் கசப்பான அனுபவங்களை கணக்கிற் கொள்ளவில்லை. சீட்டுக் கட்டை சரிவது போல பன்னாட்டு தனியார் வங்கிகள் வீழ்ந்ததை உலகம் கண்டது. உலக நிதி நெருக்கடிக்கு பின்னால் 2008 முதல் 2020 வரை அமெரிக்காவில் திவாலான தனியார் வங்கிகள் 512.

இந்தியாவில் 1947 முதல் 1951 வரை திவாலான வங்கிகள் 205, 1951 முதல் 1967 வரை திவால் ஆனவை 476 வங்கிகள். இந்த பின்புலத்தில்தான் வங்கி தேசியமயம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

வங்கி தேசியமயத்திற்கு பின்னரும் கூட 1969 இல் இருந்து 2008 வரை 38 தனியார் வங்கிகளை அரசு வங்கிகள் கையில் எடுத்து காப்பாற்றி உள்ளன.

இந்தியப் புதிய தலைமுறை தனியார் வங்கிகளும் சிக்கலில்... குளோபல் ட்ரஸ்ட் வங்கி, செஞ்சுரியன் வங்கி, யெஸ் வங்கி எல்லாமே தத்தளித்து அரசு வங்கிகளின் தலையீட்டால் கரையேறின அல்லது காப்பாற்றப்பட்டன.

இவ்வளவு அனுபவங்களுக்கு பின்னரும் தனியார்மயம் என ஒன்றிய அரசு பேசினால் அதற்கு என்ன அக்கறை? வங்கியின் உடமையாளரான அரசாங்கமே வங்கி நலன், சேமிப்புதாரர் நலன் பற்றி கவலைப்படாவிட்டால் கேள்வி கேட்க மாட்டார்களா?

யூனியன் வங்கி நிர்வாகம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என சுற்றறிக்கையை வெளியிட்டடுள்ளது.

இது தொழிற்சங்க உரிமைகளின் மீதான அப்பட்டமான அச்சுறுத்தல்.நியாயத்தை கேட்டால் ஊழியர்களை மிரட்டுகிறது வங்கி நிர்வாகங்கள். எஜமானரின் குரல் அது! ( Masters' Voice).

அரசின் நடவடிக்கைகளை, வங்கி நிர்வாகங்களின் அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

வங்கி ஊழியர்களே, அதிகாரிகளே!

இது உங்கள் வாழ்க்கைக்கான போராட்டம் அல்ல. தேசம் வாழ நீங்கள் காணும் களம். முன்னேறுங்கள்...

வெற்றி காணுங்கள்...

 

;