தமிழ் எளிது, தமிழ் இனிது!
தமிழில் பிழையில்லாமல் எழுதுவதும் பேசுவதும் தமிழர்களுக்கு மிகவும் சிரமமான ஒன்றாகவே ஆகிவிட்டது. பள்ளி யில் படிக்கும் மாணவர்களுக்கும் அலுவலக வேலையிருப்பவர்களுக்கும் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகத்தினருக்கும் எழுத்தாளர்களுக்கும் போச்சாளர்களுக்கும் கடினமாகவிட்டது. தமிழ் வழியிலேயே படிப்பவர்கள் கூட சரியாக எழுத முடிவ தில்லை. அந்த அளவு நிலைமை மோச மாகவே உள்ளது.
பேசுவது போலவே எழுத முடியும் என்கிற போது, வல்லின எழுத்தா, மெல்லின எழுத்தா, இடையின எழுத்தா என்கிற புரிதல் இல்லா மல், இரண்டு சுழி எழுத்தா, மூன்று சுழி எழுத்தா என்ற ஐயத்துடன் ச், க் போன்ற மெய்யெழுத்து போட வேண்டுமா, வேண்டாமா என்ற சந்தேகத்துடன் துணைக் கால் வருமா, வராதா என்ற ஐயப்பாட்டுடன் திக்கித் திணறித் திரிகிறது தமிழ்ச் சமூகம். இதில் வயது பேதமில்லை. பதவி வேறுபாடில்லை.
மாணவர்கள் மட்டுமல்ல,ஆசிரியர்கள் கூட மயங்குகின்றனர். ஆங்கிலம் எழுதுவது பிரச்சனையாக இருந்தால் பரவாயில்லை. தமிழே தகராறு என்றால் என்ன செய்வது- அவர்களுக்கு உதவும் வகையில் கவிஞர் நா.முத்துநிலவன், தன்னுடைய ஆசிரியப் பணியின் பட்டறிவு கொண்டு பயனுறும் வகையில் ‘தமிழ் இனிது’ எனும் நூலைப் படைத்துள்ளார்.
இந்த நூலின் ஐம்பது கட்டுரைகளும் படிப்பதற்கு மிக எளிதாகவும் சாதாரண வாசிப்பாளர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளது சிறப்பு. அந்தக் கட்டுரைகளின் தலைப்புகளே நமக்கு புரிதலையும் தெளிவையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளன. கட்டுரை களில் பழமொழிகள், திரைப்பாடல்கள், பேச்சு வழக்கில் உள்ள வாக்கியங்கள் - சொற்றொடர்கள் பலவும் பயன் படுத்தப்பட்டுள்ளது. படிப்பவர்கள் மனதில் பதியும்; நினைவில் தங்கும்.
கடைப்பிடியா? கடைபிடியா?, கோவிலா? கோயிலா?, கருப்பா? கறுப்பா?, அடியாறா? அடை யாரா?, இறகா? சிறகா?, உளமாரவா? உளமாறவா?, தேனீரா? தேநீரா?, கட்டிடமா?, கட்டடமா?, நினைவு கூர்தலா? நினைவு கூறுதலா?, அருவரப்பா? அருவெறுப்பா?, முகம் சுளித்தலா? முகம் சுழித்தலா?, வல்லியா? வள்ளியா?, நோன்பு திறப்பா?, நோன்பு துறப்பா?, தடையமா? தடயமா? இப்படி நிறைய கேள்விகளுக்குப் பதில்கள், விளக்கங்களோடு தரப்பட்டிருக்கிறது. குழப்பத்தில் உள்ளவர்களை தெளிவுபடுத்திடும்.
நூலாசிரியரே ஒவ்வொரு கட்டுரை யிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு எளிமையான பதில்களையும் கூறி விளக்கிப் புரிய வைத்து கேள்வியின் நாயகனாகவும் பதில்களின் தாயகனாகவும் திகழ்கிறார்.
பிறமொழி சொற்களைப் பய்னபடுத்தும் போது அவற்றை எப்படி எழுதுவது, தமிழின் மரபையொட்டி அவை எவ்வாறு மாறிடும் என்பது மட்டுமின்றி, பழைய மாதிரியே எழுதுவது அல்லாமல் புதிய காலச்சூழலில் கையாளப்படும் பொருள்கள், அதுபற்றிய சொற்களை பயன்படுத்துவதற்கு பழைய இலக்கணங்களுக்குப் பதில் புதிய நடைமுறைகள் புகுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதே என்று தற்காலப்படுத்துதலும் தமிழின் வளர்ச்சியும் கருதி அங்கீகரிக்கிறார்.
அதற்கு தொல்காப்பியர், நன்னூலார் முதல் தமிழண்ணல், நன்னன், தொ.பரமசிவன் உள்ளிட்டோரையும் துணைக்கழைத்துக் கொள்கிறார்.
இந்நூலின் முன்னுரயில் கவிஞர் சிற்பி, அதன் சிறப்புகளை விரிவாகக் கூறியிருப்பது மனம் கொள்ளத்தக்கது. “எல்லாவற்றையும் விடத் தாய்மொழி உணர்வையும் திருத்தமாக அதைக் கையாள வேண்டுமே என்ற அக்கறையையும் ஏற்படுத்துவதில் வெற்றிபெறுகிறார். அக்கறையையும் ஏற்படுத்துவதில் வெற்றி பெறுகிறார். நா.முத்துநிலவன்” என்று அவர் குறிப்பிடுவது இந்நூலின் அருமையை உணர்த்தும்.
இந்நூல் சாதாரண வாசகர்கள் மட்டுமல்லாமல் மாணவர், ஆசிரியர், பத்திரிகையாளர் எனப் பலரும் படிக்க வேண்டிய நூலாகும். தமிழ் செம்மைப்படவும் சிறப்படையவும் இந்நூல் உதவும்.
- ப.முருகன்.
தமிழ் இனிது(கட்டுரைகள்)
ஆசிரியர் : நா.முத்துநிலவன்
வெளியீடு : தி இந்து தமிழ் இசை, கேஎஸ்எல்
மீடியா லிமிடெட், கஸ்தூரி மையம், 124, வாலஜா சாலை, சென்னை-600 002
பக்கம்: 160, விலை : ரூ.160
“நம்மை பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச் செல்லும் நூல்”
குழந்தைகளுக்கான இந்த நூலில் கிராமத்து சிறுவனது பால்ய நாட்களைப் பற்றியும், பள்ளி கால நினைவுகள் பற்றியும் விரிவாக நகைச்சுவையோடு பகிரப்பட்டுள்ளது.
குறிப்பாக, 1. என் பேரு ஓட்டை பல்லு, 2. சாப்பாடும் கூப்பாடும், 3. கை நிறைய பொய், 4. பயம்னா பயம், 5.கிறு கிறு வானம், 6. கோழித் தூக்கம், 7.யாரு தச்ச சட்டை, 8. கள்ளன் கணக்கு, 9. காத்துல கட்டுன கோட்டை, 10. அழுது உருளுவேன் என பத்து தலைப்புகளில் உண்மை சம்பவங்கள் அடிப்படையில் எழுதப்பட்ட மிக அருமையான நாவல் இது.
நாம் குழந்தைகளாக இருக்கும்போது நமக்கு பள்ளியிலும் நாம் வசிக்கும் பகுதியிலும் பட்டப்பெயர் சூட்டுவார்கள். இந்த சிறுவனின் பெயர் ஓட்டைப்பல்லு. அது போன்று வகுப்பு ஆசிரியர் பெயர் நிமிட்டான் பழம். தலைமை ஆசிரியர் பெயர் தொந்தி கணபதி. டீச்சரின் பெயர் பூம் பூம் மாடு. இது போன்ற பட்டப் பெயர்களை நாமும் சூட்டி மகிழ்ந்திருப் போம். இதுபோன்ற நகைச்சுவை உணர்வுகளோடு தான் இந்த நூலில் நாம் பயணம் செய்ய முடியும்.
நம்ம வீட்டு பெரியவங்களுக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு சின்ன பிள்ளைகளை அடிக்கிறது தான். அதுவும் அப்பாவும், அம்மாவும் போட்டி போட்டு அடிக்கும் சம்பவம் நிறைய நமக்கு நடந்திருக்கும்.
பொதுவாக விசேஷ நாட்களில் தான் இட்லியை பார்த்த காலங்கள் உண்டு. அப்படித்தான் இக்கதையில் சோள தோசை செஞ்சு போடுவாங்க. ஒரு தோசை ஒரு கிலோ எடை இருக்கும் என்று அந்த குழந்தை சொல்லும் மொழி அற்புத மானது. தோசையை தின்பதற்குள் விக்கல் வந்துடுமாம்.
பள்ளிக்கூட இடைவேளையின் போது ஓடோடிப் போய் சேமியா ஐசையும் தேன் மிட்டாயையும் பல்லி மிட்டாயையும் சுவைத்து சாப்பிட்ட அனுபவங்களை நமக்கு பகிர்ந்து உள்ளார் எழுத்தாளர் எஸ்ரா.
பள்ளியை பார்வையிட இன்ஸ்பெக்டர் வருவார்களாம். அந்த அதிகாரிகள் மதிய உணவு சாப்பிடுவதற்கு எட்டு அடுக்கு டிபன் பாக்ஸ்சில் டவுனுக்குச் சென்று சாப்பாடு வாங்கி வருவாங்களாம். அரை வயிறுக்கு கூட சாப்பிட முடியாத சூழலில் எட்டு அடுக்கு டிபன் பாக்ஸை பார்த்து அசந்து போன சம்பவம் பதிவிட்டுள்ளது மிகவும் அழுத்தமானதாகும்.
பக்கத்து வீட்டில திருட்டுத்தனமாய் முருங்கைக்காய் பறிச்சிட்டு வர அம்மா சொல்லுவாங்க. குழந்தையும் பறிச்சிட்டு வந்துருமாம். மறுநாள் பக்கத்து வீட்டு அம்மா எவனோ முருங்கை காயை திருடிட்டு போயிட்டான் என்று சொல்லி ஒரே கூச்சல்.
பெரியவங்க பொய் சொல்லலாமாம். சின்ன குழந்தை சொல்ல கூடாதாம். அதுவும் பொய்யில்ல கால் பொய், அரைப்பொய் முக்கா பொய்யின்னு வேற இருக்காம். குழந்தைகளிடம் பேயி இருக்குன்னு சொல்லி பயமுறுத்தி வச்சிருப்பாங்க. இரவு சைக்கிள்ல தனியா போனா கேரியர்ல பேய் வந்து உட்கார்ந்திருக்குமாம்.
அதனால சத்தமா சாமி பாட்டு பாடிகிட்டு சென்ற சம்பவத்தையும் அருமையா சொல்லி இருக்காங்க. நெல் அடிக்கும் களத்தில் பசங்க எல்லாம் ஒன்று கூடி வானத்தை அன்னாந்து பார்த்துகிட்டு கிறுகிற வானம் என்று பாடிகிட்டு ரவுண்டு சுத்தணும். வானமும் கூடவே சுத்தும்.
கொஞ்ச நேரத்துல வானம் தலை மேலே விழுந்து கண்ண கட்டிக்கிட்டு வந்துரும். கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா வானம் மறுபடி மேலே போயிருமாம். இப்படி தரைக்கு வானத்தைக் கொண்டு வரும் விளையாட்டு தான் கிறுகிறுவானம். மிகுந்த நகைச்சுவையோடு அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்ளும் கதைகள் தான் இந்த நூலை படிக்கும் போது நமக்கு ஏற்படும்.
நாமும் நமது குழந்தை பருவம் மற்றும் பள்ளியில் செய்த சேட்டைகளை நினைவுகூரும் சூழலுக்கு தள்ளப்படுவோம் என்பதை உண்மை. நம் குழந்தைகளுக்கு இந்த கிறு கிறு வானம் நாவலை வாசித்துக் காட்டுவோம். மகிழ்ந்திருப்போம். உண்மை.
எம்.ஜே.பிரபாகர்
“கிறு கிறு வானம்”
நூலாசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன்
விலை: ரூபாய் 80/-
வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம் சென்னை-600093
தொடர்பு எண்: 9789825280
ஆண் மனங்களை குறிபார்த்த கல்லெறிதல்
ஒரு புத்தக வாசிப்பு என்பது கிணற்றில் போட்ட கல்லாக மூழ்கிவிடக் கூடாது. வாசகனின் இதயத்தை பிடித்து உலுக்க வேண்டும். சமூகத்திற்கான சிந்தனையை எழுத்தாளர் விதைத்திருந்தால் அது பற்றி முளைத்தெழ வேண்டும். அதுவே அந்த புத்தகத்தின் வெற்றி. நீங்கள் புத்தகங்களை மெளனமாக வாசிக்கலாம். மெளன வாசிப்பு என்று கூட சொல்லிக் கொள்ளலாம். அதற்காக உரத்த குரலில் அப்புத்தகம் எழுப்பும் கருத்துக்களை கேளாச் செவியினராக கடந்து போய்விடக் கூடாது. வாசிப்பு வழி நடத்தலே புத்தகம் உங்களை சரியான திசைவழியில் நடத்தியிருக்கிறது என்று பொருள்படும்.
வாசிப்பு இயக்கத்தில் அதிக விவாதங்களை கிளப்பியதும், அதிகம் பேர் மனம் விட்டு உரையாடிய நூலாகவும் எசப்பாட்டு அமைந்தது இயல்பான ஒன்றல்ல. ஆண் மனங்களை குறிபார்த்து கல்லெறிந்திருக்கிறார். அத்தனையும் கலகக்கற்கள். செரிமானத்திற்கு சற்று சிரமமாகத்தான் இருக்கும். வேறு வழியில்லை. இப்பொழுது கூட உங்களின் ஆண் மனதை எழுப்பாவிட்டால் காலமெல்லாம் சௌகரியமான கும்பகர்ணத் தூக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கும். ஆண்களின் உறக்கத்தை கலைக்காவிடில் பெண் உணர்வுகளை படுகுழியில் தள்ளிவிட்டு தூங்கி கொண்டிருக்கும். ஆண்களை என்று தான் எழுப்புவது?
இந்த நூல், இந்து தமிழ் திசை நாளிதழில் 52 வாரங்களாக எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுப்பாக வந்துள்ளது. ஆண் எனும் அகம்பாவத்தை 360 டிகிரி கோணத்தில் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள். ஒவ்வொரு ஆணும் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டிய தவறுகளை பாரபட்சமில்லாமல் சுட்டிக்காட்டியிருக்கிறார். பேருந்தில் பெண்களை உட்கார விடாமல் கால்களை அகட்டி உட்காருவது வரை உற்றுக் கவனித்திருக்கிறார். நாமும் தான் பேருத்தில் போகிறோம் இதையெல்லாம் எங்கே கவனித்திருக்கிறோம்? ஆனால் ஆண்கள் ஊடுருவும் அந்தரங்கப் பார்வைகளை நுணுக்கமாக கவனித்து தன் இயக்கத் தோழர்கள் என்றாலும் தயங்காது சுட்டிக்காட்டுகிறார்.
ஆண்களின் செளகரிய உலகும் பெண்களின் அவஸ்தையான உலகும் எவ்வளவு அநீதியானது என்பதை பல கட்டுரைகளில் சுட்டுகிறார்; தலையில் குட்டுகிறார். உலகை தகவமைக்கும் போதே பெண்களை எவ்வளவு கீழானவர்களாக ஒரு ஜடப் பொருளாக மாற்றி இருக்கிறோம் என்பதை தாய்வழிச் சமூகம் திரிந்து ஆணாதிக்க சமூகமாக மாறி நிற்பதை ஆண் மனதிலிருந்து விலகி பொதுவில் வைக்கிறார்.
அறிவொளி இயக்கத்தில் துடிப்பாகச் செயல்பட்ட பெண், கால மாற்றத்தில் சிரம தசையில் சந்தித்து ஒரு வேலை கேட்கையில் அவருக்கு உதவ முடியவில்லை என்று கைவிரித்து கவலைப்படுவது ஏற்க முடியவில்லை. ஏதேனும் ஒரு வழியில் உதவியிருக்கலாம். சுய இன்பம் குறித்தான கட்டுரை கொஞ்சம் அதிகமோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலகம் எல்லையற்றது என்றாலும் ஒரு சில எல்லைகள் எழுத்தில் உண்டு தானே, அதே நேரத்தில் கல்வியும், அறிவியலும், நவீனமும், ஆண்மனதில் உடைப்பை ஏற்படுத்தி வருவதையும் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும், இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமிருப்பினும் கடந்து வந்த 100 ஆண்டுகால பயணமும் மதிப்பு மிக்கது தான். அதற்கு உதாரணமாக நூலாசிரியரை கை காட்டலாம்.
கட்டுரை முழுவதும் ஒரு உலர்ந்த நடை தென்படுகிறது சீரியசான கட்டுரையில் அழகியலும் நுட்பமும் தேவையில்லை என்று நினைத்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது ஆண்களோடுமட்டும் உரையாட வேண்டிய புத்தகம் அல்ல. பெண்களையும் அவசியம் வாசிக்க வைக்க வேண்டிய புத்தகம். ஆண்களின் ஆண் மனதையும் பெண்களுக்குள் இருக்கும் ஆண் மனதையும் உடைத்தெரிய இந்நூல் ஒரு உண்மையின் குரலாக வந்திருக்கிறது. அட்டைப் படத்தில் ஹிட்லரைப் போன்று ஒருவர் விறைத்த நிலையில் முதுகைக் காட்டியபடி பிரம்போடு நிற்கிறார். ஆண்களாகிய நாம் நமக்குள் இருக்கும் ஆணாதிக்க ஹிட்லர்களை என்று விரட்டியடிக்கப் போகிறோம் என்ற கேள்விகளை எழுப்பிச் சென்றிருக்கும் எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
- செ. தமிழ்ராஜ்,
எசப்பாட்டு (கட்டுரைகள்)
ஆண்களோடு பேசுவோம்
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை பக்கம் : 216, விலை : ரூ.190
நூலைப் பெற : thamizhbook . com