விழுப்புரம் மக்கள் குறைதீர்க்கும் நாளில் 465 மனுக்கள் பெறப்பட்டன
விழுப்புரம், செப்.2 - விழுப்புரம் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் திங்கள்கிழமை (செப்.1) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 465 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைபட்டா கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) முகுந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது
விழுப்புரம், செப்.2- விழுப்புரம், வி.மருதூர், பெருமாள் நகர் திருஞானம் மகன் கணபதி (21), கடந்த ஆக 4 அன்று இரவு கே.கே ரோடு அருகே பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் விதமாக இரும்பு ராடு கொண்டு பொது இடத்தில் பொதுமக்களுக்கு தொடர்ந்து பயம் ஏற்படும் வகையில் தகராறு செய்து வந்தார். மேலும், சாலையில் செல்பவர்களை வழிமறித்து அடித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். கிருஷ்ணசாமி என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரைத் தாக்கியும் வாகனத்தை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கணபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், அவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தையும் பதிவு செய்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவின் பேரில் கணபதியை விழுப்புரம் நகர காவல் நிலைய போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.