tamilnadu

img

திட்டமிட்டபடி டிச.4ல் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்

செங்கல்பட்டு:
திட்டமிட்டபடி டிசம்பர் 4 அன்று  தமிழக அரசின் தலைமைச் செயலகமான புனித ஜார்ஜ் கோட்டை முற்றுகை யிடப்படும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சுகந்தி அறிவித்துள்ளார்.வன்முறையற்ற, போதையற்ற தமிழகம்-புதுச்சேரி  என்றமுழக்கத்துடன் சார்பில் கடலூர்மாவட்டம் வடலூர், திருவண்ணாமலை ஆகிய இரண்டு இடங்களில் இருந்து  புறப்பட்ட 400கி.மீ நடைபயணம் நடைபெற்று வருகிறது. வடலூரிலிருந்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி தலைமையில் சென்னைக்கோட்டையை நோக்கி புறப்பட்ட பிரச்சார நடைபயணக் குழு ஞாயிறன்று இரவு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை வந்தடைந்தது. மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம், தமுஎகச, வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

17 லட்சம் விதவைப் பெண்கள்
இதனைத் தொடர்ந்து மதுராந்தகம்  நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பி.சுகந்தி பேசியதாவது:2017ஆம் ஆண்டு இந்திய அளவில் சாலை விபத்துக்களில் பலியானவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எண்ணற்ற இளம் பெண்கள் விதவைகளாக மாறி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு 17 லட்சம் விதவைப் பெண்களுக்கு பென்சனை நிறுத்தியுள்ளது. இதற்கு எதிராக மாதர் சங்கம் கடந்த காலங்களில் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியிருக்கின்றோம்.

குழந்தைகளின் ஏக்கம்
 டாஸ்மாக் கடைகளை மூடி இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டும்.  இளம் பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.  விழுப்புரம் மாவட்டம்கிளியனூர் பகுதி அரசுப்பள்ளிமாணவர்களிடம் கலந்துரை யாடிய போது அந்த குழந்தை களின் உள்ளக்குமுறல்  வாழ்நாள் முழுவதும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. அதில் ஒரு குழந்தை கூறுகையில் “நாங்கள் தினம் தினம் டாஸ்மாக் கடையால் அழுது கொண்டு இருக்கின்றோம். எங்களையும் கோட்டைக்கு அழைத்துச் செல்லுங்கள். நாங்கள் படும்அவதியை முதல்வரிடம் தெரிவிக்கின்றோம்.  அப்போதாவது முதல்வர் டாஸ்மாக் கடைகளை மூடுவாரா எனப் பார்ப்போம்’’ என அந்த குழந்தை அழுதுகொண்டே சொன்னது.  வடலூரிலிருந்து வரும் வழியெல்லாம் பெண்கள் டாஸ்மாக் குமுறலைச் சொல்லிகண்ணீர் வடித்தனர். இதுபோன்று தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

பாலியல் சீண்டல்
தமிழகத்தில் மூன்றுவயது குழந்தைகள் கூட பாலியல் வன்முறையிலிருந்து தப்பிவிட முடியவில்லை. ‘பள்ளிக் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 500 குழந்தைகள் தமிழகத்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.  இதைத் தடுக்க சிறப்புச்சட்டம் இருக்கின்றது.  போக்சோ சட்டம் உள்ளது. இந்தசட்டத்தை தமிழக அரசும் காவல் துறையும் சரியாக பயன்படுத்தவில்லை. குழந்தைகள், பெண்கள் மீதான வழக்குகளை ஆறு மாதத்திற்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கி முடிக்க வேண்டும் என மாதர் சங்கம் வலியுறுத்துகின்றது.  அப்போதுதான் சமுகத்தில் ஒரு நம்பிக்கை வரும்.  அப்போதுதான் பாதிக்கப்படுபவர்கள் தைரியத்தோடு காவல் நிலையத்திற்கு  வந்து புகார் அளிப்பார்கள்.பெண்களின் உரிமைகளை மறுக்கும் அரசாக மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி உள்ளது. அவர்களுக்கு எடுபிடி செய்யும் அரசாம் மாநில அதிமுக பழனிசாமி ஆட்சி உள்ளது. இவர்கள் வன்முறைக்கு எதிராக ஒரு நகர்வைக் கூடச் செய்யவில்லை. கடந்த எட்டு நாட்களாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறோம். ஆனால் சென்னை  ஆணையர் அலுவலகத்திலிருந்து மீண்டும் மீண்டும் தொடர்ந்து  தொலைபேசியில் தொடர்பு கொண்டுவருகின்றனர். தாம்பரத்தை  தாண்டி சென்னைக்குள் நுழையக்கூடாது. மீறி நுழைந்தால் கைது செய்வோம் என எச்சரித்து வருகின்றனர். இதுபோன்ற காவல்துறையின் அடக்குமுறைக்குப் பயந்தவர்கள் மாதர் சங்கத்தினர் அல்ல. உங்களுடைய தடைகளைத் தூள் தூளாக்குவோம்; வன்முறையற்ற போதையற்ற சமுகத்தை உருவாக்க  சிறை சொல்லவும் தயாராக இருக்கின்றோம். திட்டமிட்டபடி டிசம்பர் 4ம் தேதிகோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் பேசினார்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி வாழ்த்து
வன்முறையற்ற, போதையற்ற தமிழகம் என்ற முழக்கத்தோடு கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து  கோட்டையை நோக்கிதிங்களன்று 8வது  நாளாக  மதுராந்தகம் அடுத்த புக்கத்துறை அருகே  புறப்பட்ட நடைபயணத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்புத்தலைவர் பி.சம்பத் நடைபயணத் தலைவர்களை சந்தித்து கதராடை அணிவித்து வாழ்த்தினார். மார்க்சிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் அ.பாக்கியம், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு,நடைபயணக்குழுவினரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.  மாநிலதுணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்பாளர் தனலட்சுமி, வசந்தி உள்ளிட்ட பலர்அப்போது உடனிருந்தனர்.

;