tamilnadu

img

இந்நாள் ஜன. 17 இதற்கு முன்னால்

395 - முழு ரோமப் பேரரசையும் ஆட்சிபுரிந்த கடைசிப் பேரரசரான முதலாம் தியோடோ சியஸ் இறந்தார். இவரது மறைவுக்குப்பின் ரோமப் பேரரசு ஒன்றாக இணையவேயில்லை. பொதுவாக எல்லா நாடுகளும், முடியாட்சியிலிருந்து குடியரசாக மாறுவதுதான் வரலாற்றில் காணப்படும். ஆனால் ரோமப் பேரரசு இதில் தலைகீழானது. கி.மு.753இல் ரோம் நிர்மாணிக்கப்பட்டபோது முடியரசாகத் தொடங்கினாலும், கி.மு.509இலேயே அது குடியரசாகிவிட்டது. கி.மு.27இல் ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அகஸ்டஸ் சீசரைப் பேரரசராக்கினாலும், ரோம் வழக்கமான முடியரசாக இல்லை. செனட்டால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ராணுவத்தாலும் ஏற்கப்படுபவர் மட்டுமே (சீசர் அல்லது அகஸ்டஸ் என்ற பட்டத்துடன்) பேரரசராக முடியும். அதனால், அவரை இம்ப்பரேட்டர் என்றழைத்தனர்.

லத்தீனில் ராணுவத் தளபதி என்ற பொருளுடைய இச்சொல்லே,பிரெஞ்சில் எம்பெயர் என்றாகி, ஆங்கிலத்தில் எம்ப்பரர் (ஆளுதல் என்ற பொருளுடைய இம்பீரியம் என்பதிலிருந்து எம்ப்பையர், இம்பீரியலிசம்) என்றானது! பேரரசு என்றழைக்கப்பட்டாலும், பெரும்பகுதித் தன்னாட்சிப் பெற்றிருந்த பல நகரங்களின் கூட்டமைப்பாகத்தான் ரோமப் பேரரசு இயங்கியது. இதனால், பேரரசர் என்ற பெயரில் செயல்பட்ட அரசுத் தலைவரை ஏற்காமல், ஏதாவதொரு நகரத்தின் தலைவர், ராணுவத் தளபதி உள்ளிட்டோர், போரிட்டு அப்பதவியைப் பிடிப்பதும் அடிக்கடி நிகழ்ந்தது. அதனால்தான் ஒரே ஆண்டில் நான்கு(கி.பி.69), ஐந்து(கி.பி.193), ஆறு(கி.பி.238) பேரரசர்களையெல்லாம் ரோம் கண்டிருக்கிறது. பலரும் பேரரசர் பதவியைக் கைப்பற்ற முயற்சித்தது, அந்நிய ஆக்கிரமிப்புகள், விவசாயிகள் கிளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் உள்நாட்டுப் போர்கள் ஏற்பட்டது, மூன்றாம் நூற்றாண்டின் நெருக்கடி என்றழைக்கப்படுகிறது. 284இல் பேரரசரான டயோக்ளெஷியன், பரந்து விரிந்திருந்த ரோமை நிர்வகிப்பதற்காக கிழக்கு (பின்னா ளில் பைசாந்தியப் பேரரசு), மேற்குப் பகுதிகளாகப் பிரித்து, 286இல் மேற்கை நிர்வகிக்க மேக்சிமியஸ் என்பவரை நியமித்தார்.

இருவரும் சம அதிகாரத்துடன் அகஸ்டஸ் என்ற பட்டத்துடன் பேரரசர்களாகச் செயல்பட்டதுடன், 293இல் இரண்டு துணைப் பேரரசர்கள் சீசர் என்ற பட்டத்துடனும் நியமிக்கப்பட்டனர்.  392இல் மேற்குப் பேரரசர் இரண்டாம் வேலண்டீனியன் இறந்தபோது, கிழக்கின் பேரரசராக இருந்த முதலாம் தியோடோசி யஸ் மொத்த ரோமுக்கும் பேரரசரானார். அவர் மறைந்தபின் 15 வயது மகன் ஆர்க்கேடி யஸ் கிழக்குக்கும், 8 வயது மகன் ஹானோரியஸ் மேற்கிற்கும் பேரரசர்களாயினர்.

 

;