சீனாவில், நேற்று முதல் 5ஜி தொழில்நுட்பத்தில் தொலைத்தொடர்பு சேவை அதிகாரப்பூர்வமாக வழங்கப்படுகிறது.
சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான சீனா மொபைல் (China Mobile), சீனா டெலிகாம் (China Telecom) மற்றும் சீனா யூனிகாம் (China Unicom) ஆகியவை 5ஜி தொழில்நுட்பத்தில் தொலைத்தொடர்பு சேவையை அதிகாரப்பூர்வமாக வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மாதாந்திர 5ஜி சேவை 128 யுவான் ($18) என்ற அளவில் வழங்கப்படும் என வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாதத்திற்கு 598 யுவான் ($85) கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர் 300GB டேட்டாவை (1Gbps டவுன்லோட் வேகத்தில்) பெற்றுக் கொள்ளலாம். குறைந்த கட்டணம் செலுத்துவோருக்கு 300Mbps வேகமே கிடைக்கும்.
முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள 5ஜி சேவையானது பீஜிங், ஷாங்காய் போன்ற முதல் தர நகரங்கள், வூகான், நஞ்சிங் போன்ற இரண்டாம் தர நகரங்கள் என மொத்தம் 50 நகரங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகள் அனைத்தும் 5ஜி சேவை வழங்கும் வகையில் 5,000 தரை கட்டுப்பாட்டு மையங்களை China Mobile நிறுவனம் மட்டுமே அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஊரக பகுதிகளில் 5ஜி சேவை கிடைக்க மேலும் சிலகாலம் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.