ஆக்கிரமிப்பாளருக்கு துணைபோகும் வட்டாட்சியர் மார்க்சிஸ்ட் கட்சியினர் நடைபயண இயக்கம்
ஈரோடு, செப்.25- ஆக்கிரமிப்பாளருக்கு துணைபோகும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மார்க்சிஸ்ட் கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் பொய்யேரிக்கரையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக இருக்கும் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளவதென மார்க்சிஸ்ட் கட்சியினர் அறிவித்தனர். அதன்படி, வியாழனன்று நடைபயணம் புறப்பட்டபோது பாதி வழியில் காவல் துறையினர் தடுத்து அனைவரையும் ஒரு பேருந்தில் அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அழைத்து சென்றனர். அங்கு மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். முன்னதாக, இந்த இயக்கத்திற்கு சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.விஜயராகவன், தாலுகாக்குழு உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி, கிளைச் செயலாளர் சி.சீனிவாசன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.