மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
சேலம், செப்.30- இலவச மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீடில்லாத ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்ற முக்கியக் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்கத்தின் பாரதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை காளிதாஸ் துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எம்.கே. ராமச்சந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் எஸ். அழகுவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம். குணசேகரன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் ஜெயக்குமாரிடம் நேரடியாகச் சென்று தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
