விசைத்தறி தொழிலாளர் சங்கப் பேரவை
கோவை, ஆக. 25- கோவை மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) இரண்டாவது ஆண்டுப் பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கோவை மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் ஆண்டுப் பேரவை கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. எஸ்.ஜோதிபாசு தலைமை ஏற்றார். சங்க நிர்வாகி எஸ்.வேலுச்சாமி கொடியேற்றி வைத்தார். மாநிலச் செயலாளர் பி.முத்துச்சாமி பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார். வேலை அறிக்கையை பொதுச்செயலாளர் ஜோதிபாசு முன்மொழிந்தார். இதில், விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 1ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், மாவட்டத் தலைவராக எஸ்.நடராஜ், பொதுச் செயலாளராக எஸ். ஜோதிபாசு, பொருளாளராக கே.கோபால், துணைத் தலைவராக என்.சுந்தரம், ஆர்.அய்யா சாமி, துணைச் செயலாளராக ஆர்.சங்கரன், விமலா மேரி உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கோவை மாவட்ட சிஐடியு நிர்வாகி ஏழுமலை பேரவையை நிறைவு செய்து உரையாற்றினார்.