tamilnadu

img

ஆட்டோ  ஒட்டுநர்கள் வாழ்வை சூறையாடும் ஆன்லைன் அபராதம் - சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் ஆவேசம்

சிறு தவறுகளுக்கு கூட ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம் பறிப்பதை கண்டித்து கோவையில் திங்களன்று சிஐடியு தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டத்தை காரணம் காட்டி ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இது ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. அன்றாடம் ஏறிவரும் பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் விலை உயர்வினால் விழி பிதுங்கியுள்ள ஆட்டோ தொழிலாளர்கள் போக்குவரத்துத்துறையின் இத்தகைய அபராத நடவடிக்கையால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். லேட் எப்சிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.50 அபராதம், புகை செக்கப் இல்லாத வாகனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம், சிறுசிறு விதிமீறல்களுக்கு கூட ஆயிரக்கணக்கில் அபராதம், சிறை தண்டனை, ஓட்டுனர் உரிமம் ரத்து போன்ற அராஜக நடவடிக்கை ஆட்டோ தொழிலாளர்களின் பொருளாதாரத்தையே சூறையாடி உள்ளது. இதனை கண்டித்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களை முற்றுகையிடுவது என்கிற சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் முடிவின் அடிப்படையில் திங்களன்று இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முற்றுகை போராட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் இரா.செல்வம் தலைமை தாங்கினார். போராட்டத்தை துவக்கிவைத்து சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்பநாபன் உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட துணை பொதுச்செயலாளர் எம்.கே.முத்துக்குமார், பொருளாளர் எம்.மைக்கில்சாமி மற்றும் கே.பழனியப்பன், பி.சி.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் மத்திய வட்டார போக்குவரத்து துறை அதிகாரி சத்தியமூர்த்தியை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். சிஐடியு தலைமையில் ஆட்டோ ஓட்டுனர்களின் திடீர் முற்றுகை போராட்டத்தில் பாலசுந்தரம் சாலையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.