tamilnadu

img

கோவில் தட்டு காணிக்கை கையாடல் - பூசாரிகள் 4 பேர் கைது

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் தட்டு காணிக்கையை கையாடல் செய்த பூசாரிகள் 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் தட்டு காணிக்கையை எடுத்து அதற்கென உள்ள உண்டியலில் செலுத்தி திருக்கோவில் வருமானமாக சேர்க்க இந்து அறநிலையத்துறை உத்தரவு அமலில் உள்ளது. அந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2006 ஆம் வருடம் அப்போதைய கோவில் அர்ச்சகர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அந்த வழக்கில் பக்தர்கள் செலுத்தும் தட்டு காணிக்கையை திருக்கோவில் வருமானமாக கருதி உண்டியலில் சேர்க்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்துவதை கண்காணிக்க கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தட்டு காணிக்கையை உரிய முறையில் உண்டியலில் செலுத்தாத பூசாரிகள் மீது உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கைலாசமூர்த்தி என்பவர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். மேலும், இதுகுறித்து கோவில் பரம்பரை அறங்காவலர் மீதும் புகாரளிக்கப்பட்டது.

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் கோயில் செயல் அலுவலர் மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, தன் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அந்த புகார் மனுவை விசாரித்த மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் கடந்த மார்ச் 14 ஆம் தேதி கோவில் செயல் அலுவலரின் புகார் மீது நடவடிக்கை எடுத்து வனபத்ரகாளியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர் வசந்தா மற்றும் பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் ஆகிய நான்கு பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தாவை போலீசார் தேடி வருகின்றனர்.

;