செப். 3 இயக்குநர் அலுவலகம் முற்றுகை அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு
சென்னை, ஆக. 20 - 9 ஆயிரம் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி செப்டம்பர் 3 அன்று கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது. அரசாணைப்படி பணி மேம்பாட்டு ஊதியம் வழங்க வேண்டும், முனைவர் பட்டம் பெறாத ஆசிரியர்களுக்கும் இணைப் பேராசிரியர் பணி மேம்பாட்டு நிதியை வழங்க வேண்டும், அரசுக் கல்லூரி மூத்த ஆசிரியரை கல்லூரி கல்வி இயக்குநராக நியமிக்க வேண்டும், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 9 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையிலும், 110 கல்லூரி முதல்வர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி புதனன்று (ஆக.20) மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகங்கள் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சைதாப்பேட்டையில் உள்ள இணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் சோ.சுரேஷ், “அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் செப்.3 அன்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்” என்றார்.