பீகாரில் தவறாக நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஆதாரை’ வசிப்பிட ஆதாரமாக அறிவித்தும் அதிரடி
புதுதில்லி, ஆக. 22 - பீகார் வாக்காளர் பட்டியலிலிருந்து, சிறப்பு தீவிரத் திருத்தத்தின் (Special Intensive Revision- SIR) மூலம் தவ றாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதி மன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அத்துடன், வாக்காளர்களின் வசிப்பி டத்தை உறுதிசெய்வதற்கான 11 ஆவ ணங்களுடன், ஆதார் அட்டையையும் ஆதாரமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. பீகாரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெய ரில், குறிப்பிட்ட பகுதி மக்களின் வாக்கு ரிமையை தேர்தல் ஆணையம் பறித்தது. இதனால், பீகார் வாக்காளர்கள் எண்ணி க்கை 7.9 கோடியிலிருந்து 7.24 கோடி யாகக் குறைந்தது.
65 லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து, ஜனநாயக சீர்திருத்த சங்கம், பியுசிஎல் உள்ளிட்ட அமைப்புக்கள் மற்றும் ஆர்.ஜே.டி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், யோகேந் திர யாதவ் உள்ளிட்ட செயற்பாட்டா ளர்கள் வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கில், பட்டியலிலிருந்து நீக்கப்பட் டோரின் விவரங்களைத் தேர்தல் ஆணை யத்தின் இணையதளத்தில் வெளி யிடும்படி நீதிபதிகள் உத்தர விட்டிருந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை யன்று இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபி ஷேக் மனு சிங்வி, பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினர்.
அவர்கள், வாக்காளர்கள் பட்டிய லில் தொடர குடியுரிமைச் சான்றினைச் சமர்ப்பிக்க வேண்டும் என ஜூன் 24 அன்று தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் எந்த தவறும் நடக்க வில்லை என்பதை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கேட்டார். பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 85 ஆயிரம் வாக்கா ளர்கள் மீண்டும் பெயரை சேர்க்க விண்ணப்பித்துள்ளதாகவும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் புதிதாகப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். வாதங்கள் அனைத்தையும் கேட்ட நீதிபதிகள், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கை யில் தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும், வசிப்பிடச் சான்றுக்கான ஆதாரமாக, தேர்தல் ஆணையம் ஏற்கனவே உள்ள 11 ஆவ ணங்களுடன் ஆதார் அட்டையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.
நீக்கப்பட்ட வாக்காளர்கள் செப்ட ம்பர் 1-க்குள் தங்கள் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இந்த விண்ணப்பங்களை ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம் என்றும் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கானோர் நீக்கப்ப ட்டிருக்கும் விஷயத்தில், ‘அரசியல் கட்சி கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்யவில்லை’ என்றும், ‘வாக்குச் சாவடி அளவிலான முகவர்கள் (BLA) என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?’ என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 1.6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடி முகவர்களிடமிருந்து வெறும் 2 ஆட்சேபணைகள் மட்டுமே பெறப்பட்டிருப்பது தங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் நீதிபதிகள் கூறினர். இறுதியாக, இந்த வழக்கில் 12 அரசியல் கட்சிகளையும் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.