அரசுப் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கைது
கொழும்பு, ஆக. 22 - அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை பிரதமராக 1993 முதல் 2022-ஆம் ஆண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் 5 முறை பதவி வகித்தவர் ரணில் விக்கிரமசிங்கே. மேலும் இவர் 2022 ஜூலை 21 முதல் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 வரை ஜனாதிபதியாகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 22, 23 தேதிகளில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மனைவியுடன், ரணில் விக்கிரமசிங்கே லண்டன் சென்றார். அப்போது அவருடன் 10 பேர் சென்றதாகவும், இதற்காக இலங்கை அரசின் நிதி 17 மில்லியன் செலவிடப்பட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், லண்டன் பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் தனது மனைவியே செலுத்தியதாக ரணில் விக்கிரமசிங்கே மறுத்து வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த இலங்கையின் சிஐடி போலீசார் ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப் பட்டதாக அறிவித்தனர். இந்த கைது நடவடிக்கை இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.