tamilnadu

img

அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க மாணவர்கள் சைக்கிள் பிரச்சாரம்: திருப்பூரில் மலர் தூவி வரவேற்பு

திருப்பூர், மே 26 -அரசுப் பள்ளிகள் தேசத்தின் அடிப்படை சொத்து, பொதுக் கல்வியை வலுப்படுத்த அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் ஞாயிறன்று திருப்பூர் மாவட்டத்துக்கு வருகை தந்த இந்திய மாணவர் சங்கத்தின் சைக்கிள் பிரச்சாரக் குழுவினருக்கு மலர் தூவியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கவும், அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், விளையாட்டு வசதியை உத்தரவாதப்படுத்தவும் வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தமிழகத்தில் சென்னை, கடலூர், கோவை, குமரி ஆகிய நான்கு முனைகளில் இருந்து சைக்கிள் பிரச்சாரப் பயணம் கடந்த 25ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.கோவையில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைத்த சைக்கிள் பிரச்சாரப் பயணக்குழுவுக்கு மாணவர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் காவியா ஆகியோர் தலைமை ஏற்றனர். இப்பயணக் குழுவினர் இரண்டாம் நாளாக திருப்பூர் மாவட்டத்தில் தங்கள் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டனர். பல்லடத்தில் தொடங்கி அருள்புரம், வீரபாண்டி பிரிவு வழியாக திருப்பூர் மாநகருக்கு வருகை தந்தனர். பல்லடம் சாலை வழியாக திருப்பூர் மாநகருக்குள் இப்பயணக்குழுவினர் வருவதற்கு காவல் துறையினர்அனுமதி மறுத்து விட்டனர். இதையடுத்து வீரபாண்டி பிரிவில் இருந்துவித்யாலயம் வழியாக முருகம்பாளையம், பெரியாண்டிபாளையம், அணைப்பாளையம், அனுப்பர்பாளையம் வரை இக்குழுவினர் பிரச்சாரம் செய்தனர். இக்குழுவில் 13 மாணவிகள் உள்பட 50 பேர் பங்கேற்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சைக்கிளை மிதித்து வந்தனர். வீரபாண்டி பிரிவு, முருகம்பாளையம், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியாண்டிபாளையம் பிரிவு ஆகிய இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வரவேற்புக் கொடுத்தனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் உள்படகட்சி அணியினர் அவர்களை வரவேற்றனர். பல இடங்களில் இக்குழுவினருக்கு மலர் தூவி அன்பான வரவேற்புக் கொடுக்கப்பட்டது. பட்டாசு வெடித்தும், பயணக்குழுவினருக்கு துண்டு அணிவித்தும்வரவேற்பு அளிக்கப்பட்டது.பெரியாண்டிபாளையம் பிரிவில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய இரு அமைப்புகள் இணைந்து வாழ்த்து முழக்கம் எழுப்பி இக்குழுவினரை வரவேற்றனர். மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பி.ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.பிற்பகலில் இக்குழுவினர் ஆத்துப்பாளையம் ரோடு, அங்கேரிபாளையம், பாண்டியன் நகர், வாலிபாளையம், மொரட்டுப்பாளையம் வழியாக ஊத்துக்குளி டவுன் பகுதிக்குப் பயணம் மேற்கொண்டனர்.