தருமபுரி, மே 14-தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் துணை ராணுவப் படை பாதுகாப்புடன் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் தேர்தல் அலுவலரிடம் மனு அளித்தார்.தருமபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான எஸ்.மலர்விழியிடம் திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் அளித்த மனுவில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்தவாக்குச் சாவடி மையங்களில் துணை ராணுவப் படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோருக்கு என தனி வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும். மறுவாக்குப் பதிவை வீடியோ கேமரா மூலம் பதிவிட வேண்டும். வாக்காளர்களை அடையாளப்படுத்தும் வகையில் கூடுதல் அலுவலர்களை நியமிக்க வேண்டும். மறு வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச் சாவடி மையங்களில் புதிதாக வாக்குச்சாவடி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மனு அளித்தார்.