tamilnadu

முத்தூட் மினி நிறுவனத்தில் 803 பவுண் நகை கொள்ளை - இருவர் கைது

முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் 803 பவுண் நகை கொள்ளை போன விவகாரத்தில் ஊழியர் ரேணுகா தேவி , அவரது நண்பர் சுரேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் உள்ள முத்தூட் மினி நிறுவனமொன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை 3 மணியளவில் முகத்தை துணியால் மறைத்தபடி நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபா், அங்கிருந்த 2 பெண் ஊழியா்களை தாக்கியுள்ளார்.  அதன் பிறகு சாவியை எடுத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இது தொடா்பாக 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை நடந்தபோது நிறுவனத்தில் பணியில் இருந்த ஊழியர் திவ்யா மற்றும் ரேணுகாதேவி ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் இன்று காலை முத்தூட் மினி நிறுவனத்தில் பணியாற்றிய ரேணுகா தேவி மற்றும் அவரது நண்பர் கெம்பட்டி காலனியைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுரேஷிடம் இருந்து கொள்ளை போன நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட கடை ஊழியர் ரேணுகா தேவியின் செல்போனில் இருந்து சுரேஷ்க்கு அழைப்பு விடுக்கப்பட்ட செல்போன் டவர் தகவல்களை வைத்தே குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


;