tamilnadu

ஈரோடு மற்றும் உதகை முக்கிய செய்திகள்

4 மணி நேரம் மட்டுமே வழங்கப்படும் மும்முனை மின்சாரம்

நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை

ஈரோடு, ஜூன் 3-ஈரோடு மாவட்டத்தில் மும்முனை மின்சாரம் 4 மணி நேரம் மட்டுமே விநியோகிக்கப்படுவதால் நீர் பாய்ச்ச முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள விவசாய கிணறு, ஆழ்குழாய்கிணறுகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் பெற, பகலில் ஆறு மணி நேரமும், இரவில் எட்டு மணிநேரமும் மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. பகலில் ஆறு மணி நேரம் என்பது குறைவாக உள்ளதால், 12 மணி நேரமாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சமீப காலமாக பகலில் நான்கு மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்படுகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாய பயன்பாட்டுக்கு பகலில் 12 மணி நேரம் மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை. மாறாக, கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டம் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பகலில் நான்கு மணிநேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. அதுவும், மதிய நேரத்தில் தான் வழங்கப்படுகிறது. தற்போது வெப்பம் அதிகமாக உள்ளதாலும், பூமி வறண்டு கிடப்பதாலும், பயிற்கள் அதிகமாகதண்ணீரை உறிஞ்சுகிறது. மழை இல்லாத நிலையில், ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கிணற்றுக்கு ஆறு மணி நேரம் தண்ணீர் எடுத்து வழங்கினால்தான், பயிர்களுக்கு மூன்று மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச முடியும். ஆனால் 4 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதால் போதுமான அளவு நீரை வழங்க முடியவில்லை என்கின்றனர்.இவ்வாறு விவசாயிகள் கவலைப்படும் நிலையில் விவசாயிகளுக்கு முறையாக மின்சாரம் வழங்காமல், மின் மிகை மாநிலம் என அரசு கூறி வருவது, விவசாயிகளை மிகவும் வேதனையடையச் செய்கிறது.
 

மதிப்பெண் சான்று வழங்கும் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலக பதிவு

உதகை, ஜூன் 3-10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெணடாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண்மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விபரங்களுடன் பள்ளிக்குச் சென்று மதிப்பெண் சான்று பெற்று வேலைவாய்ப்பு அலுவலக பதிவையும் மேற்கொள்ளலாம். ஜூன் 3 முதல் 17ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். மேலும் றறற.வnஎநடயiஎயயiயீயீர.படிஎ.in என்ற இணையதளம் வழியாகவும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.