ஈரோட்டில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
ஈரோடு, மே 17-ஈரோடு மேட்டூர் சாலையில் தொடரும் கடுமையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாநகர் பகுதியில் முக்கிய சாலைகளில் மேட்டூர்சாலை ஒன்றாகும். அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பூர், கோவை, ஊட்டி, பழனி, மதுரை, கரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும்பேருந்துகள் மேட்டூர் சாலை வழியாக சென்று பேருந்து நிலையத்துக்குள் சென்று வந்தன. ஆனால் அங்கு போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டதால் பேருந்து நிலையத்துக்கு செல்லும் பேருந்துகள் அரசு மருத்துவமனையில் இருந்து வாசுகி வீதி வழியாக திருப்பி விடப்பட்டது. இவ்வாறு பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டாலும், மேட்டூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. சத்தி சாலையில் இருந்து முனிசிபல் காலனி வரை வழிநெடுகிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் மேட்டூர் சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் ஊர்ந்தபடிதான் செல்ல வேண்டியுள்ளது.இந்நிலையில் வாசுகி வீதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அனைத்து பேருந்துகளும் மேட்டூர் சாலை வழியாக செல்கிறது. இதனால் மேட்டூர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது,ஈரோட்டில் உள்ள முக்கிய சாலைகளில் மேட்டூர் சாலையில் தான் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு பாலம்கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பிரப்ரோடு, ஈ.வி.என்.ரோடு, பெருந்துறை ரோட்டை இணைத்து புதிய மேம்பாலம் கட்டப்படும்போதே மேட்டூர் சாலையிலும் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது மேம்பாலம் கட்டுவதற்கான மண் பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆனால் மேம்பாலம் கட்டப்படவில்லை. எனவே புதிய மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கோபி அருகே சூறாவளிக் காற்றினால் மரம் முறிவு
கோபி, மே 17-கோபிசெட்டிபாளையம் பகுதியில் புதனன்று இரவு பெய்த கனமழை மற்றும் சூறாவளிக் காற்றினால் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்ததால் வீடு முழுவதும் சேதமடைந்தது.ஈரோடு மாவட்டம், கோபி சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் வாழை மரங்கள், நெல் பயிர்கள், கரும்பு உள்ளிட்டபயிர்கள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் சாலையோரமரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இந்நிலையில் புதனன்று இரவு பெய்த கனமழை மற்றும் சூறாவளிக் காற்றினால் கமலா ரைஸ் மில் வீதியில் அரச மரத்து மாரியம்மன் கோயில்வளாகத்தில் இருந்த இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரத்தின் ஒரு பகுதி முறிந்து விழுந்தது. முறிந்து விழுந்த மரம் அருகில் உள்ள கண்ணப்பன் என்பவரது வீட்டின் மீதுவிழுந்ததால் வீடு முழுவதும் சேதமடைந்துள்ளது. வீட்டில்வாடகைக்கு குடியிருந்த ஜெயலட்சுமி என்ற பெண்மணியின் தலையில் மேற்கூரை ஓடு விழுந்து தலையில் படுகாயம்ஏற்பட்டது. மரம் முறிந்து விழுந்து வீடு சேதமடைந்துள்ளதை வருவாய்த்துறையினரும், காவல் துறையினரும் நேரில் பார்வையிட்டு சேதமதிப்பை கணக்கீடு செய்தனர்.