tamilnadu

img

கோபியிலும் குடிநீர் விநியோகம் தனியாருக்கா!

கோபி, மே 12-கோபி நகராட்சியிலும் குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு விடக்கூடாதென குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்மார்ட் சிட்டி, அம்ருட் திட்டம்என்ற பெயரில் பெரு நகரங்களில்குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு, சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் பணியில் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக கோவையில் குடிநீர் விநியோகத்தை பிரான்ஸ் நாட்டின் சூயஸ் கம்பெனிக்கு விடப்பட்டுள்ளது. இதேபோல் ஈரோட்டிலும் அபெக்ஸ் தனியார் நிறுவனம் மாநகராட்சியுடன் இணைந்து குடிநீர் விற்பனைக்கு தயாராகியுள்ளது. இதற்காக திட்டமிட்டே உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்தாத தமிழக அரசு நீதிமன்றம் தலையிட்ட போதும் காலம் கடத்துவதாக கூறப்படுகிறது. நகரத்திலும், நகரத்தை நோக்கி வரும் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்காவிட்டால் அவை வாழத்தகுந்தநகரங்களாகி விடும் எனக் கூறும் மத்திய அரசு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் நகரங்களில் அனைத்து பணிகளையும் தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. இந்நிலையில் ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி 30வார்டுகள் உள்ளது. சுமார் 50 ஆயிரம் மக்கள்வசித்து வருகின்றனர்.

இங்கு 24 மணி நேரமும் சீரான குடிநீர் விநியோகம் என ரூ.53 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜேசிபி, டிராக்டர், இயந்திரங்களுடன் புதிய குழாய்கள் பதிக்க ஜோதிநகர் பகுதியில் குழி தோண்டும் பணி நடைபெற்றது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு பணிகளைத் தடுத்து நிறுத்தினர். கோவை, ஈரோடு உள்ளிட்ட பெருநகரங்களைப் போல் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் குடிநீர்விநியோகப்பணி தனியாருக்கு விட இப்பணிகள் நடைபெறுகின்றன என எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவே எங்களுக்கு போதுமானது என்றனர். புதிய திட்டத்தில் விநியோகிப்படும் குடிநீருக்கு மீட்டர் பொருத்தப்படும், பின்னர் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படும் தொடர்ந்து தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அப்பகுதிக்குச் சென்ற காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்டதுறைக்கு புகார் அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். புகார் அளிக்க பொதுமக்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் அதுவரை பணிகளை தொடரக்கூடாது என்று காவல் துறையினர் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நகராட்சி சார்பில் அமைக்கப்படும் குடிநீர் குழாய் குறித்த முழு விபரங்களும் பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அப்பணிகள் முடிவுற்று குடிநீர் விநியோகம் செய்யப்படும் முறைகள்குறித்தும் முறையான விளக்கமளிக்க வேண்டும் என்று மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கெம்புராஜ், நந்தகுமார் மற்றும் முனுசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

;