tamilnadu

img

ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்றிடுக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்

கோவை, ஜூன் 2–மேற்கு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சுல்தான்பேட்டை, பொங்கலூர், உடுமலை மற்றும் மடத்துக்குளம் உள்ளடக்கிய பகுதிகளில் சமீபகாலமாக கடும் வறட்சிநிலவி வருகிறது. இந்நிலை தொடருமானால் விவசாயப்பகுதியான இப்பகுதிகள் பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும். இப்பகுதி விவசாயிகளின் 40 ஆண்டுகளாக கோரிக்கை ஆனைமலை நல்லாறுதிட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்பதுதான்.மேலும் இது ஒன்றே நிரந்தரதீர்வாகும். தேர்தல் காலத்தில் தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவோம் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், வேட்பாளர் என்கிற முறையில் நானும் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளேன். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பகுதி விவசாயிகள் பயனடைவர். கேரளமாநிலம் என்ஓசி தரவில்லை என்கிற ஒரு சிறிய காரணத்திற்காக இத்திட்டம் தாமதமாகி வருகிறது என்பது ஏற்புடையதாக அல்ல. இத்திட்டத்தினால் கேரள மாநிலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. தமிழக அரசு உடனடியாக விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையை மனதில் கொண்டு கேரள மாநில அரசோடு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற முனைப்பு காட்ட வேண்டும் என்கிறகோரிக்கையை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் முன்வைக்கிறேன். அதேநேரத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நானும், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கனேசமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கிற ஆலோசனை கூட்டம் ஜூன் 30 ஆம் தேதிஅன்று நடத்துவது, இதற்காக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கலந்து பேசிய பிறகு முறைப்படி அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்து கோவை சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

;