tamilnadu

வட்டி பணத்தை கேட்டு மிரட்டியதால்

ஈரோடு, மே 2-வார வட்டிக்கு பணம் வாங்கிய ஜவுளி தொழிலாளி ஈரோட்டில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.ஈரோடு பழையபாளையம் சுத்தானந்தா நகர் ஜெகநாதர் வீதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (43).இவரது மனைவி நதியா (31).ஸ்ரீதர் குடும்ப செலவிற்காக ஈரோடு குமலன்குட்டை பகுதியில் இயங்கிவந்த திலீப்குமார் பைனான்சில் ரூ.40 ஆயிரம் வார வட்டிக்குகடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனில் ரூ.30 ஆயிரம் அசல் தொகையை கொடுத்துள்ளார். மீதி கட்ட வேண்டிய ரூ.10 ஆயிரம் தொகைக்கு ரூ.30 ஆயிரம் கட்ட வேண்டும் என நிதி நிறுவனத்தினர் கூறியுள்ளனர். ரூ.10 ஆயிரம் மட்டுமே கொடுக்க வேண்டும், அதனை தவணை முறையில் கொடுத்து விடுகிறேன் என கூறியுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு சென்று ஸ்ரீதரை சட்டையை பிடித்து இழுத்து கேட்டும், தகாத வார்த்தைகளால் திட்டியும் பணத்தை உடனடியாக கட்ட வேண்டும் என மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஸ்ரீதர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் மே 1 ஆம் தேதி மதியம் சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் உயிரிழந்தார். வட்டி கட்ட வேண்டும் எனவற்புறுத்தி மன வேதனை அடையச் செய்த பைனான்ஸ்நிறுவனர் திலீப்குமார் உள்ளிட்டோரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். அப்பொழுதுதான் மருத்துவமனையில் உள்ள அவரது சடலத்தை வாங்குவோம் என அவரதுஉறவினர்கள் மருத்துவமனையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்  தலைமையில் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் திலிப் குமார், வெங்கடேஷ் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை விரைந்து கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து அவரது உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர். இறந்த ஸ்ரீதருக்கு கவின் (15) ஜீவஸ்ரீ (12) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

;