tamilnadu

img

காங்கேயம் அருகே கிணற்று நீரை விற்கும் அதிமுக நிர்வாகி

திருப்பூர், ஏப். 11 –திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர், நீதிமன்றத் தடை உத்தரவை மீறி, கிணற்றில் இருந்து லாரியில் தண்ணீர் பிடித்து குடிநீர் விற்பனைக்கு கொண்டு சென்றதை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்தனர்.வருவாய்துறை அதிகாரிகள் நேரில்வந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து லாரிகள் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டன. காங்கயம் ஊராட்சி ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது சாம்பவலசு வாழைமரத் தோட்டம். இங்கு 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்து வருகின்றன. வீரணம்பாளையம் ஊராட்சி அதிமுக முன்னாள் துணை தலைவராக இருந்தவர் முத்துக்குமார். இவர் இங்கு நிலம் வாங்கியிருந்தார். அங்கிருந்த கிணற்றில் இருந்து டிராக்டர் மூலம் தண்ணீர் விற்பனையும் செய்து வந்தார். இதற்கு இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். பொதுமக்கள் புகாரை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே வணிக ரீதியாக தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை தடுக்குமாறும், மீறினால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமலைசாமி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதில் கிணற்றில் இருந்து முத்துக்குமார், தண்ணீர் எடுத்து வணிகரீதியாக விற்பனை செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக கிணற்றில் இருந்து தொடர்ந்து தண்ணீர் எடுத்து வணிகரீதியாக விற்பனை செய்யப்பட்டது. இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கிணறுகள், ஆழ்குழாய்களில் நீர் மட்டம்நாளுக்கு நாள் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் தண்ணீர் எடுத்துவந்த இரு லாரிகளைச் சிறைப்பிடித்தனர். வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அந்த லாரிககள் கொண்டு செல்லப்பட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து தாராபுரம் சார்ஆட்சியர் மூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

;