நாமக்கல், ஏப்.26-விசைத்தறி தொழிலில் பணிபுரியும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் குமாரபாளையம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம், தட்டாங்குட்டை ஊராட்சியில் சடையம்பாளையம், காந்திநகர் பகுதியில் 25க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இதில் தறி ஓட்டுபவர்கள், பாவுபோடுபவர்கள், நூல்ஓட்டுபவர்கள் என அனைத்து பிரிவுகளிலும் 750க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பகல், இரவு ஷிப்ட் முறையில் பணிபுரிந்து வருகின்றார்கள். இவர்களுக்கு உரிமையாளர்கள் நான்கு வருடமாக கூலி உயர்வு கொடுக்காமல் உள்ளனர். கடுமையான விலைவாசி உயர்வுவீட்டு வாடகை, மின்சாரம், கேஸ்விலை, பால் விலை என அனைத்தும் உயர்ந்துள்ள நிலையில்தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மூலம் உரிமையாளர் சங்கங்களுக்கு நேரில் கடிதம்கொடுத்தும் பேச முன்வராமால்காலம் கடத்தி வருகின்றனர். ஆகவே, வட்டாட்சியர் தலையிட்டு விசைத்தறி தொழிலாளர்களின் கோரிக்கைளை தீர்வு காண வேண்டும் வலியுறுத்தி வெள்ளியன்று சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் குமாரபாளையம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இதில், சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் எம்.ஆர்.முருகேசன், கிளைச்செயலாளர் மாதேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.