யாரும் எதிர்பாராத வகையில் 1992-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று கிரிக்கெட் உலகத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த பாகிஸ்தான் அணியைப் பற்றி இன்று பார்க்கலாம்.
கேப்டன் : சர்பிராஸ் கான்.
பேட்ஸ்மேன்கள் : பக்கர் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் அஜாம், ஆசிப் அலி.
ஆல்ரவுண்டர்கள் : முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஹாரிஸ் சோஹைல், சதாப் கான், வஹாப் ரியாஸ், இமாத் வாசிம்.
விக்கெட் கீப்பர் : சர்பிராஸ் கான்.
பந்துவீச்சு : ஷகீன் அப்ரிடி, ஹசன் அலி, முகமது அமீர், முகமது ஹஸ்னைன்.
சிறப்பு : பேட்டிங் பற்றி கவலைப்படாமல் பந்துவீச்சை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வெற்றியைக் குவிக்கும் ஒரே அணி.எந்தவிதமான ஆடுகளமாக இருந்தாலும் சரி ஒரே மாதிரியான பந்துவீச்சை வெளிப்படுத்தும் சிறப்புமிக்க அணி.ஒரு தொடரின் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டால் கோப்பையைக் கூட கைப்பற்றும் அதிர்ஷ்ட அணி பாகிஸ்தானாகும்.
வீரர்கள் தேர்வு எப்படி?
பேட்ஸ்மேன்களில் பக்கர் ஜமான், பாபர் அஜாம், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் ஆகியோர் மட்டுமே சூப்பர் பார்மில் உள்ளனர். இமாம் உல் ஹக், ஹாரிஸ் சோஹைல், சதாப் கான், இமாத் வாசிம் ஆகியோர் நடப்பாண்டில் திணறி வரும் நிலையில் அவர்களை அணியில் சேர்த்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து மண்ணில் எப்படி?
இங்கிலாந்து மண்ணில் மற்ற நாடுகளை விட பாகிஸ்தான் அணி அதிக தொடர்களில் விளையாடி வருவதால் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் சிக்கலின்றி வெற்றியைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலம்: மிடில் ஆர்டர் பலமாக இருப்பதால் பேட்டிங்கில் பாகிஸ்தான் அணிக்குச் சிக்கல் ஏற்படாது. வஹாப் ரியாஸின் அனுபவ பந்துவீச்சு மற்ற பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியைக் குறைக்கும். பகுதி நேரப்பந்துவீச்சுக்கு 6 ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் பந்துவீச்சிலும் எந்த பிரச்சனையும் இல்லை. இக்கட்டான நிலையில் தனது அதிரடி மூலம் அணிக்கு வெற்றியைத் தேடித்தரும் பக்கர் ஜமான் பாகிஸ்தான் அணிக்கு தூணாக இருக்கிறார்.
பலவீனம்: அனுபவம் குறைந்த பந்துவீச்சாளர்கள் அணியில் அதிகம் இருப்பது. பேட்டிங்கில் தேவையில்லாத ஷாட்களை அடித்து விரைவாக ஆட்டமிழப்பது. துடிப்பாக பீல்டிங் செய்யாமல் ரன்களை விட்டுக்கொடுப்பது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளிடம் பதற்றமாக விளையாடுவது. நன்றாக பந்து வீசினாலும் ஒரே பிட்சில் பந்தை டெலிவரி செய்யும் ஹசன் அலியை அடிக்கடி ஆடும் லெவனில் களமிறக்குவது.
மாற்ற வேண்டியவை: இந்திய அணியைப் போலவே ஆடும் லெவனில் வீரர்களைத் தேர்வு செய்வதில் சொதப்புவதை மாற்றினால் நல்லது.தேவையில்லாமல் ஸ்லெட்ஜிங் செய்து சர்ச்சை, அபராதம், தடை பெறுவதைக் குறைத்துக் கொண்டால் வெற்றிப்படிகளில் குதிக்கலாம்.முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் ஆகியோரின் மந்தமான பேட்டிங்கை மாற்றிக் கொண்டு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் பேட்டிங்கில் கூடுதல் சாதகம் உருவாகும்.
உலகக்கோப்பையில் எப்படி?
இங்கிலாந்து வானிலை பாகிஸ்தான் அணிக்கு நன்கு பழக்கப்பட்டவை என்பதால் புத்துணர்வோடு விளையாடி வெற்றியைக் குவிப்பார்கள். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிடம் திணறாமல் வெற்றிபெற்றுவிட்டால் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் கூட வெல்லும்.ஆனால் மேற்குறிப்பிட்ட 4 அணிகளும் அசுர பலத்தில் உள்ளதால் சற்று சிரமம் தான்.மேலும் இலங்கை, வங்கதேசம், விண்டீஸ் அணிகளும் சரிசம பலத்துடன் களமிறங்குவதால் அரையிறுதி வாய்ப்பு கூட கல்தா ஆகலாம்.
... நாளை தென் ஆப்பிரிக்கா