பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்
ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளை டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (பிரிஸ்பேன்) ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த நிலையில், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டு மைதானத்தில் வெள்ளியன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து தொடக்கம் முதலே ரன் வேட்டையில் ஆதிக்கம் செலுத்தியது. தொடக்க வீரர் பர்ன்ஸ் மட்டும் சொதப்ப மற்ற மிடில் ஆர்டர் வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக அசூர பார்மில் உள்ள டேவிட் வார்னர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுத்து முச்சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் டேவிட் வார்னருக்கு இது முதல் முச்சதமாகும். இளம் வீரர் லபுஸ்சாக்னே (162) சதமடிக்க ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 127 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 589 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. வார்னர் (335), வாடே (38) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் தொடக்கம் முதலே திணறி வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணி 2-வது டெஸ்ட் போட்டியிலும் எளிதாக வெற்றியை ருசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
73 ஆண்டுகால சாதனை தகர்த்த ஸ்மித்
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 23 ரன்களை கடந்த பொழுது, டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்கள் (126 இன்னிங்ஸ்) குவித்த முதல் வீரர் என்ற சாதனையை ஸ்மித் படைத்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து வீரர் வாலி ஹேமண்ட் (1945-46) 131 இன்னிங்ஸ்களில் 7 ஆயிரம் ரன்கள் கடந்ததே முந்தைய சாதனையாக இருந்த நிலையில், சுமார் 73 ஆண்டுகளுக்குப் பின்பு ஸ்மித் அந்த சாதனையைத் தகர்த்துள்ளார்.