tamilnadu

img

இந்நாள் இதற்கு முன்னால்... அக். 10

1868  - ஸ்பெயினிடமிருந்து கியூபா விடுதலையடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, கியூபாவின் முதல் விடுதலைப்போரான பத்தாண்டுப்போர் அல்லது பெரும் போர் தொடங்கியது. விடுதலையடைந்ததாக அறிவித்தவர், கரும்புத் தோட்டங்கள், சர்க்கரை ஆலை ஆகியவற்றின் உரிமையாளரான கார்லோஸ் செஸ்பீட்ஸ்! தவறாமல் குறிப்பிடவேண்டிய செய்தி என்னவெனில், பிரெஞ்சுப் புரட்சி, அமெரிக்க விடுதலை போன்றவற்றினால் உந்தப்பட்டு, அந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான கியூப விடுதலை முயற்சிகளை முதலாளிகள் ஆதரிக்கவில்லை. ஏனென்றால், அப்போது அவர்களுக்கு அடிமைகள் தேவைப்பட்டனர். அடிமைமுறையை ஆதரித்த ஸ்பெயினின் அரசும் தேவைப்பட்டது. புதிய தொழில்நுட்பங்களின் வரவால், தோட்டங்களில் தொழிலாளர்களின் தேவை குறைந்துவிட்டதால், அடிமைகளைப் பராமரிக்கும் செலவுகளால் முதலாளிகள் இழப்புக்கு ஆளாகிக்கொண்டிருந்தனர். அதனால் அடிமைமுறைக்குத் தடை, வரிக்குறைப்பு, நாடாளுமன்றத்தில் கியூபர்கள் பங்கேற்பு, ஸ்பானியர்களுக்குச் சமமாகக் கியூபர்களையும் நடத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளைக்கொண்ட போராட்டங்களை முதலாளிகளே முன்னெடுத்தனர். விடுதலை அறிவிப்பைத் தொடர்ந்து உருவான போர் 1868-78வரை நீடித்து, வெற்றி-தோல்வியின்றி, ஸேஞ்சோன் ஒப்பந்தத்துடன் முடித்துக்கொள்ளப்பட்டது. அதற்கடுத்து, 1879இல் தொடங்கி, 1880இல் ஒடுக்கப்பட்டது சிறு போர் என்று குறிப்பிடப்படுகிறது. இவற்றுக்கிடையில், கியூபாவின் ஏற்றுமதியில் 90 சதவீதம் (ஸ்பெயினுக்குச் சென்றதைப்போல 12 மடங்கு!) அமெரிக்காவுக்குச் செல்லுமளவுக்கு அமெரிக்க முதலாளிகள் இங்கு வளர்ந்திருந்தனர். இதனால், கரீபியப்பகுதியில் ஸ்பெயினின் ஆதிக்கத்தை முடிவுக்குக்கொண்டுவந்து, தான் கட்டுப்படுத்த விரும்பிய அமெரிக்கா, 1895இல் (மூன்றாவது) கியூப விடுதலைப்போர் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 1898இல் ஹவானா துறைமுகத்திலிருந்த தங்கள் கப்பல் வெடித்ததற்கு ஸ்பெயின்தான் காரணம் என்றுகூறி, அதன்மீது போர்தொடுத்தது.  வேறுவழியின்றி 1898 டிசம்பர் 10இல் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கியூபாவை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டு ஸ்பெயின் வெளியேறியது. 1902 மே 20இல் கியூபாவிற்கு விடுதலை என்று அறிவித்தாலும், அதன் நிதி, வெளியுறவு விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் தனக்கிருப்பதாகக்கூறிய அமெரிக்கா, படைகளையும் அங்கு நிறுத்தியது. ஸ்பெயினுக்கு பதிலாக அமெரிக்க ஆதிக்கம் என்பதை ஏற்காத விடுதலைப்போரின் வீரர்கள் 1906இல் நடத்திய ஆயுதப்போரில் அரசுப் படைகள் தோற்றதைச் சாக்கிட்டு, கியூபாவுக்கு ஆளுநரை நியமித்து, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது அமெரிக்கா. இக்காலமே கியூபாவில் ஊழல் உருவான காலம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. 1908இல் புதிய குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தன்னாட்சி அளிப்பதாகக்கூறி அமெரிக்கப்படைகள் 1909இல் வெளியேறினாலும்கூட, 1959இல் கியூபப் புரட்சி வெற்றியடையும்வரை அமெரிக்காவின் தலையீடு(ஆதிக்கம்!) தொடர்ந்தது!

;