tamilnadu

img

இந்நாள் இதற்கு முன்னால்

1962 - மேற்கிந்தியத் தீவுகள் கூட்டமைப்பு சிதறுண்டது. கரீபியக் கடலில் இங்கிலாந்தின் குடியேற்றங்களாக இருந்த பல தீவுகளும் இணைந்து, இந்தக் கூட்டமைப்பை 1958இல்தான் உருவாக்கியிருந்தன. இங்கிலாந்தின் ஆளுகையில் வடஅமெரிக்கக் கண்டத்திலிருந்த குடியேற்றங்கள் கூட்டமைப்பாகி, பின்னர் கனடா என்ற நாடாகவும், ஆஸ்திரேலியக் கண்டத்திலிருந்த குடியேற்றங்கள் காமன்வெல்த்தாகி, ஆஸ்திரேலியாவாகவும்  ஆனதைப்போன்று, இங்கிலாந்திடமிருந்து ஒரே நாடாக விடுதலைபெற உதவும் என்ற நோக்கில் இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

உண்மையில், இரண்டாம் உலகப்போருக்குப்பின், கடல்கடந்த குடியேற்றங்களைத் தனி நாடுகளாக்கிக் கொண்டிருந்த இங்கிலாந்து, ஒரே நாடாக விடுதலையளிப்பதற்காக, பிரிட்டிஷ் கரீபிய கூட்டமைப்புச் சட்டம் என்பதை 1956இல் இயற்றியதன்படியே இக்கூட்டமைப்பு உருவானது. ஆனால் ஏற்கெனவே குடியேற்றங்கள் தன்னாட்சி பெற்ற மாநிலங்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஒருங்கிணைந்த சுங்கவரி ஒன்றியமாக இல்லாததால், இவற்றுக்கிடையேயான வணிகம் சிக்கலானதாக இருந்தது. பெரிய மாநிலங்களாக இருந்த டிரினிடாட்-டொபாகோ, ஜமைக்கா ஆகியவை, சிறிய மாநிலங்களிலிருந்து மக்கள் அதிக எண்ணிக்கையில் புலம் பெயர்ந்துவிடுவார்கள் என்று அஞ்சியதால், மாநிலங்களுக்கிடையே மக்கள் செல்லக் கட்டுப்பாடுகள் இருந்தன. கூட்டரசுக்குத் தேவையான நிதியை, மாநிலங்களும், இங்கிலாந்தும்தான் தரவேண்டுமென்ற நிலையில், பெரிய மாநிலங்கள் தங்கள் பொருளாதாரத்திற்கேற்ற அளவு அதிக நிதியைத் தரத் தயாராக இல்லை. உண்மையில், கூட்டரசின் பட்ஜெட்டைவிட, ஜமைக்கா, டிரினிடாட்-டொபாகோ மாநிலங்களின் தனித்தனி பட்ஜெட்டுகள் அதிகமாக இருந்தன.

கூட்டமைப்பின் பொருளாதாரத்தில், இந்த இரு மாநிலங்களின் பங்கு 85 சதவீதமாக இருந்தது, மிகப்பெரிய ஏற்றத்தாழ்வாக இருந்தது. இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்ட்டர் முறைப்படி உருவாக்கப்பட்ட நாடுகளின் தலைமை அமைச்சர்களுக்கு இருந்த அதிகாரங்கள், இந்தக் கூட்டமைப்பின் தலைவருக்கு இல்லாத பலவீனமான கூட்டமைப்பாக இது இருந்தது. கூட்டமைப்பின் பிற மாநிலங்களிலிருந்து அதிகத் தொலைவில் அமைந்திருந்தது, மக்கள்தொகைக்கேற்ற பிரதிநிதித்துவம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 1961இல் ஜமைக்கா நடத்திய வாக்கெடுப்பில், கூட்டமைப்பில் தொடர்வதற்கெதிராக மக்கள் வாக்களித்தனர். இக்கூட்டமைப்பிலிருந்த தீவுகள் தற்போது 9 தனி நாடுகளாக உள்ளன. இப்பகுதியிலுள்ள 15 நாடுகள் இணைந்து கரீபியச் சமூகம் என்பதை 1973இல் உருவாக்கின. பொருளாதார சமத்துவமில்லாத பகுதிகள் ஒரே நாடாக இணைந்திருக்க முடியாது என்பதற்கு, மேற்கிந்தியத் தீவுகள் கூட்டமைப்பு மிகச்சிறந்த உதாரணம்!

;