1785 - உயிரிழப்பை ஏற்படுத்தியஉலகின் முதல் வான்பறப்புவிபத்து ஏற்பட்டது. வெப்பக்காற்றைப் பயன்படுத்தாமல், எடைகுறைந்த ஹைட்ரஜனைப் பயன்படுத்திப் பறக்கும்ரோஸியர் பலூன் என்பதை உருவாக்கியவரான ரோஸியர், மற்றொருவருடன், ஆங்கிலக் கால்வாயை இதன்மூலம் பறந்து கடக்க முயற்சித்தபோது, தீப்பிடித்ததில் வாயு வெளியேறியதால், கீழே விழுந்து இருவரும் இறந்தனர்.
நீண்டநேரம் வானில் மிதந்தபடி செய்யவேண்டிய ஆய்வுகளுக்காக, ஹைட்ரஜனுக்குப் பதிலாக, தீப்பிடிக்காத ஹீலியம் வாயுவைப் பயன்படுத்தி இந்த பலூன் இன்றும் பயன்பாட்டிலிருக்கிறது. 2016இல் ஃப்யோடார் கோன்யுகோவ் என்பவர், இந்த பலூனில் 11 நாட்களில் உலகைச் சுற்றிப் பயணித்துக் காட்டினார். வானில் பறப்பதற்கான தொடக்க;f கால ஆய்வுகளில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். எந்திரத்தின் உதவியுடன் பறத்தலை, ரைட் சகோதரர்கள் 1903இல் வெற்றிகரமாக செய்துகாட்டினாலும், பாதுகாப்பான பயணிகள் வாகனங்கள் என்ற இடத்தை விமானங்கள் பெறும்வரை, வான்கப்பல்கள் போன்றவை தொடர்ந்து பயன்பாட்டிலிருந்தன. 50 பேருக்குமேல் பலியான முதல் வான் விபத்துகூட, 1923இல் 52 பயணிகள் பலியான டிக்சிம்யூட் என்ற ஃப்ரெஞ்ச்சுக் கடற்படையின் வான்கப்பல் மின்னலால் தாக்கப்பட்டு கடலில் விழுந்த விபத்தே. 1908இல் ஆர்வில் ரைட்டுடன் பறந்து, விபத்தில் இறந்த தாமஸ் செல்ஃப்ரிட்ஜ்-தான் எந்திரம் பொருத்தப்பட்ட விமானத்தின் விபத்தில் பலியான முதல் பயணி. 1909இல் பலியான யூஜின் லெஃபிப்வர்-தான் விமான விபத்தில் பலியான முதல் விமானி.
முதன்முதலாக விமானங்கள் நடுவானில் மோதிக்கொள்வது, 1912இல் ஃப்ரான்சில் நடைபெற்றது. 1938இல் கொலம்பியாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியொன்றில், பார்வையாளர்கள்மீது விமானம் விழுந்ததில் 52 பேர் பலியானதே, 50க்கும் மேற்பட்டோர் பலியான முதல் விமான விபத்து. 200க்கும் அதிகமானோர் பலியான விமான விபத்துகள் இதுவரை 33 நிகழ்ந்துள்ளன. 1985இல் ஜப்பான் ஏர்லைன்சின் விமான விபத்தில் 520 பேர் பலியானதே ஒரு விமானத்திலிருந்த அதிகம்பேர் பலியான விபத்து. 1977இல் ஸ்பெயினின் டெனரைஃப் விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதிக்கொண்டதில் 583 பேர் பலியானதே, மிக அதிக உயிர்ப்பலி ஏற்படுத்திய விமான விபத்து. விமான விபத்து தொடர்பான ஒரு நிகழ்வில் மிக அதிக உயிர்ப்பலி ஏற்படுத்தியது, 2,996 பேரைப் பலிவாங்கிய, இரட்டைக் கோபுரத் தாக்குதல்!