tamilnadu

img

இந்நாள் இதற்கு முன்னால்... ஜூன் 07

1944 - உலக வரலாற்றின் மிகப்பெரிய கடல்வழி ஊடுருவலான நார்மண்டி தரையிறக்கம் என்பது, இரண்டாம் உலகப்போரின்போது நடைபெற்றது. ஜெர்மெனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பிரான்சை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இது, ஆப்பரேஷன் நெப்டியூன் என்றும் குறிப்பிடப்பட்டது. ஆப்பரேஷன் ஓவர்லார்ட் நடவடிக்கையின் முதல் கட்டமான இதன் வெற்றியே, மேற்கு ஐரோப்பியப் பகுதியில் நேச நாடுகளின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. சுமார் ஒன்றரை லட்சம் வீரர்களை, கடல் வழியாக நார்மண்டியில் இறக்கிய இந்நடவடிக்கைக்கு, போர்க்கப்பல்கள், கரையிறக்கும் எல்எஸ்டிக்கள், கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் என்றுசுமார் ஐயாயிரம் கலங்கள் இந்த ஒரே நாளில் அங்குகுவிக்கப்பட்டன.

உண்மையில், இதற்கான திட்டமிடல்கள் 1943 ஜூலையிலிருந்தே, அதாவது ஏறத்தாழ ஓராண்டுக்குநடைபெற்றன. 80 கி.மீ. நீள நார்மண்டி கடற்கரையை, 5 பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, இரண்டில் அமெரிக்கா,இரண்டில் இங்கிலாந்து, ஒன்றில் கனடா படைகள் நுழைந்தன. உண்மையில், இந்தப் படைகள் தலைமையேற்று வழிநடத்தினாலும், இந்த நடவடிக்கையில் 12 நாடுகளின் படைகள் பங்கேற்றிருந்தன. கடற்கரையிலிருந்த ஜெர்மன் படைகளை அகற்றுவதற்காக, முந்தைய நாள் நள்ளிரவில் நேச நாடுகளின் வான்படை விமானங்களும், போர்க்கப்பல்களும் மிகப்பெரிய குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தின. இதனால், தரை, வான், கடற்படைகளின் கூட்டுத் தாக்குதலிலும் மிகப்பெரியதாக இது குறிப்பிடப்படுகிறது.

இவற்றுக்குப் பின், ராணுவம் தரையிறங்கினாலும், ‘அட்லாண்ட்டிக் சுவர்’ என்ற பெயரில் ஏராளமான தடுப்பு களை ஹிட்லர் ஏற்படுத்தியிருந்ததால், உட்பகுதிக்குள் நுழைவது, நேச நாடுகளின் படைகளுக்குச் சவாலாகவே இருந்தது.அதிலும், மலைப்பாங்கான ஒரு பகுதியில் இறங்கிய அமெரிக்கப் படைகள், மலை உச்சியிலிருந்த ஜெர்மன் படைகள்கடற்படைத் தாக்குதலுக்குத் தப்பியிருந்த நிலையில், அவற்றின் தாக்குதலால் மிகுந்த சேதத்தையும், உயிரிழப்புகளையும் சந்தித்து, தோல்வியின் விளிம்புக்கே சென்று மீண்டன. இந்த ஒரே நாளில் இரு தரப்பிலுமாக, சுமார் பத்தாயிரம் வீரர்கள் பலியான இந்நடவடிக்கை, ஜூன் இறுதிக்குள்சுமார் ஒன்பது லட்சம் வீரர்கள் நார்மண்டி வழியாக நுழைவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்து, நேச நாடுகளின் வெற்றிக்கு வழிவகுத்தது. கூட்டாகப் போரிட்டுக் கொண்டிருந்தாலும், வெறும் ராணுவ ஒத்துழைப்பு மட்டுமின்றி, பல அரசுகளின் அரசியல் முடிவுகளும் தேவைப்பட்ட இந்நடவடிக்கை, ஹிட்லரின் வீழ்ச்சியைத் தொடங்கிவைத்தவற்றுள் ஒன்றாக அமைந்தது!

;