tamilnadu

img

இந்நாள் இதற்கு முன்னால்....

1595 - உலகின் முதல் அச்சிட்டப்பட்ட நூல்அட்டவணை, நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழக நூலகத்தில் நாமென்க்ளேட்டர் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டது. நூலக அட்டவணைகளின் வரலாறு, அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது! ஆம்! கி.மு.7ஆம் நூற்றாண்டின் அஷுர்பானிபல் நூலகம், துறைவாரியாகப் பிரிக்கப்பட்ட அட்டவணையைக் கொண்டிருந்தது. புதிய அசிரியப் பேரரசின் பேரரசரான அஷுர்பானிபலின் அரண்மனையிலிருந்த இந்த நூலகம், முப்பதாயிரத்துக்கும் அதிகமான (அக்காலத்தில் தகவல்களை எழுதிவைக்கும்) களிமண் பலகைகளைக் கொண்டிருந்தது. இதன் நூலகரான இப்னிசாரு, அங்கிருந்த களிமண் பலகைகள் குறித்த துறைவாரியான அட்டவணைகளையும் களிமண் பலகைகளாக உருவாக்கியிருந்தார்.

கி.மு.3ஆம் நூற்றாண்டில், 5 லட்சத்திற்கும் அதிகமான பேப்பிரஸ் சுருள்களைக் கொண்டிருந்த, அக்கால உலகின் குறிப்பிடத்தக்க நூலகமாக, எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நூலகம் திகழ்ந்தது. இதன் நூலகரான காலிமாச்சஸ், நூலாசிரியர்கள் வாரியாக நூல்களைப் பட்டியலிட்ட பினாக்ஸ் என்னும் அட்டவணையை உருவாக்கினார். இதில் நூலின் பெயர், பிறப்பிடம், பெற்றோர் உள்ளிட்ட நூலாசிரியரைப் பற்றிய விபரங்கள், அவரது கல்வி, அவருக்குப் பயிற்சியளித்த ஆசிரியர் ஆகியவற்றுடன், நூலின் முதல் வரி, பொருளடக்கம், நூல் பிறப்பைப் பற்றிய குறிப்பு, நூலாசிரியரின் பிற நூல்கள் ஆகியவையும் குறிப்பிடப்பட்டிருந்தன. பண்டைய கிரேக்க மொழியில் பலகை, பதிவேடு ஆகியவற்றைக் குறிக்கும் பினாக்ஸ் என்ற சொல்லே இதற்குப் பெயராகியது. கி.பி.9ஆம் நூற்றாண்டில், ஃப்ராங்க்கிய கரோலிங்கன் பள்ளிகளின் நூலகம், படிக்க வெளியே எடுத்துச் செல்லப்படும் நூல்களின் பதிவை உருவாக்கியது.

பத்தாம் நூற்றாண்டின் பாரசீக நகரான ஷிராஸ் நூலகத்தில் 300 அறைகளில் இருந்த நூல்கள், அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தன. 1246இல் பிரான்சின் ஏமியன் பேராலய நூலகம்தான் நூல்களுக்கு எண்கள் அளிக்கத் தொடங்கியது. பதினாறாம் நூற்றாண்டில், 24 ஆயிரம் நூல்களைக்கொண்ட நூலகத்தை வைத்திருந்த முகலாயப் பேரரசர் அக்பர், அவற்றுக்கான அட்டவணையை அவரே உருவாக்கியிருக்கிறார். 1595இல் அச்சிட்ட அட்டவணை உருவாக்கப்பட்டாலும், அதன்பின், பாரீசின் சார்போன் நூலகம்தான் அகரவரிசைப்படியான அட்டவணையை உருவாக்கியது. தனித்தனி அட்டைகளை உருவாக்குதல் 1780இல் வியன்னாவில் உருவாகி, 1791இன் பிரெஞ்ச் அட்டவணைப்படுத்துதல் விதிகளில் சேர்க்கப்பட்டது. கணினியின் வரவுக்குப்பின், 1960களில் மார்க்(மெஷின் ரீடபுள் கேட்டலாகிங்) சீர்தரம் கொண்டுவரப்பட்டு, 1990களுக்குப்பின் ஆன்லைன் கேட்டலாக்குகளும் உருவாயின.

====- அறிவுக்கடல்===

;