tamilnadu

img

அடக்குமுறையைத் தூளாக்கி செங்கொடி உயர்த்திய காஞ்சிப் பாட்டாளி வர்க்கம் அழைக்கிறது வாருங்கள்..!

சிஐடியு 14வது மாநில மாநாடு செப்டம்பர் 19 முதல் 22 வரை நான்கு நாட்கள் எழுச்சியுடன் காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது.இந்திய தொழிற்சங்க இயக்கம் உருவான நூறாவது ஆண்டில்; சிஐடியு உதயமாகி ஐம்பதாவது ஆண்டில் 14வது மாநில மாநாடு நடப்பது என்பது கால வரலாற்றின் சிறப்பு.மாநாடு நடைபெறும் காஞ்சிபுரம் தொன்மை வாய்ந்த வரலாற்றுப் பின்னணியில் நட்சத்திரமாய் பரிணமிக்கும் தனித்தன்மை வாய்ந்த நகரம். பட்டு நெசவின்அடையாளத்தை சூடிக் கொண்டிருந்த காஞ்சி மாவட்டம் பன்னாட்டு நிறுவனங்களின் புதிய பரிமாணத்தையும் தனது அடையாளமாக சூடிக்கொண்டிருக்கிறது. சீன அறிஞர் யுவான்சுவாங் கால் பதித்த காஞ்சி மண்ணில் தமிழகத்தின் உழைக்கும் மக்களுக்காக களம் கண்ட 780 போராளிகள், பிரதிநிதிகளாக கால் பதிக்க சிஐடியு காஞ்சி மாவட்டக்குழு வரவேற்கிறது.

1930 ஆம் ஆண்டு, விடுதலைப் போராட்ட வீரர் கே.எஸ்.பார்த்த சாரதி அவர்கள் தலைமையில் பட்டு கைத்தறி நெசவாளர்களை சங்கமாக அணிதிரட்டி நெடிய போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தியதன் மூலம் அவர்களுக்கான கூலி நிர்ணயம், வேலை பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை சாதித்து பெருமையுடன் தமிழகத்தின் முதல் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தை அமைத்துக் கொடுத்து, இன்று காஞ்சிபுரத்தில் 25க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உருவாக காரணமாக இருந்த அமைப்பு சிஐடியு. 1935ஆம் ஆண்டு முதல் நெசவாளர்களை திரட்டுவதற்காக உதயமான தொழிற்சங்க இயக்கம், கடந்த 85ஆண்டுகளாக அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்தியில் வலுவான இயக்கமாக கால் பதித்தது. 2008 ஆம் ஆண்டுவரை முறைசாரா தொழிலாளர் அமைப்புகளில் மட்டுமே சுழன்று கொண்டிருந்த காஞ்சி மாவட்டத்தில் நவீன புதிய ஆலைகள்; 

அதில் பணியாற்றும் பல்லாயிரம் தொழிலாளிகள்; ஆலைக்கு உள்ளே அடக்கப்பட்டவர்களாக; தங்கள் சுயமரியாதையை இழந்தவர்களாக; சீருடை அணிந்த நவீன அடிமைகளாக குமுறிக் கொண்டிருந்தவர்களுக்கு தங்கள் குரலை ஓர் அமைப்பின் மூலம் வெளிப்படுத்த, தங்கள் உரிமையை நிலைநாட்ட அவர்கள் தேர்ந்தெடுத்த - அரவணைத்துக் கொண்ட சங்கம் சிஐடியு. தொழிற்சங்க உரிமைக்காக 2008 ஆம் ஆண்டு துவங்கிய ஹூண்டாய் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்; அதன் தொடர்ச்சியாக 2009 ஆம் ஆண்டு நோக்கியா தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டம்; 2010 ஆம் ஆண்டு சங்கம் அமைப்பதற்கான பாக்ஸ் கான், சான் மீனா, பி.ஒய்.டி என அலையலையாய் எழுச்சிபெற்றன வேலை நிறுத்தங்கள். இப்போராட்டங்களை அரசும் கார்ப்பரேட் முதலாளிகளும் இரும்புக்கரம் கொண்டு அடக்க முயற்சித்தார்கள். போராட்டங்களை ஒடுக்குவதற்கு பொய் வழக்கு, கைவிலங்கு என்று தொழிலாளர்களையும் தொழிலாளர்களுக்கு  தலைமை தாங்கிய சிஐடியு தலைவர்களையும் சிறையில் அடைத்தார்கள். அன்று தொடங்கிய அடக்குமுறைகள் சிஐடியு 14-வது மாநாடு நடைபெறுகிற இந்த தருணம் வரையிலும் நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

சிஐடியு சங்கத்தை எங்கும் நிலைநாட்டவிடமாட்டோம், செங்கொடிகள் இப்பகுதியில் எங்கும் பறக்க விடமாட்டோம், இது கொடிகள் இல்லாத பகுதி  என்று அதிகாரத்தில் இருந்தவர்கள் ஓலமிட்டார்கள் . ஆலைக்குள்ளே இருந்த தொழிலாளிகள், சங்கம் என்று நினைத்தாலே அண்டை மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்வது மட்டுமல்ல; வேலையே பறிக்கப்படும் என்ற அச்சுறுத்தலை முதலாளிகள் ஏவினார்கள். ஆலைகளைச் சுற்றி நீதிமன்றத்தின் மூலமாக தடைகளைப் பெற்றார்கள். எந்த ஒரு போராட்ட இயக்கமும் ஆலைக்கு அருகாமையில் நடக்கக்கூடாது என்று எல்லோரையும் கண்காணிக்க ஆலைக்கு உள்ளே வெளியே நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன. சங்கம் துவக்க நினைத்தவர்கள் உள்ளூர் அரசியல் அடியாட்கள், ஆதிக்க சக்திகள் மூலம் மிரட்டப்பட்டார்கள். இப்படி பல தடைகள் மூலமாக, கனவில் கூட தொழிற்சங்கம் என்ற சிந்தனை வரக்கூடாது என ஏவிவிடப்பட்ட தடைகள் எண்ணற்றவை. 

ஆனாலும் சங்கம் உதயமாவதை இவர்களால் தடுக்கமுடியவில்லை. சங்கம் அமைத்தவர்கள் கொத்துக்கொத்தாய் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள். வெளிமாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள். முதலாளிகளும் ஆட்சியாளர்களும் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளை எதிர்கொள்ள புதிய புதிய போராட்ட வடிவங்களை தொழிலாளி வர்க்கம் இக்காலகட்டங்களில் மேற்கொண்டது. போராடக் கூடாது, வேலை நிறுத்தம் செய்யக் கூடாது என்றெல்லாம் நீதிமன்றங்கள் தடைவிதித்தன. கடந்த பத்தாண்டுகளில் தடைகளை மீறி, தமிழகம் இதுவரையிலும் பார்த்திராத எண்ணற்ற போராட்டங்களை காஞ்சி மாவட்ட நவீன பாட்டாளி வர்க்கம் எதிர்கொண்டு வரலாறு படைத்தது. மாதக்கணக்கான வேலை நிறுத்தங்கள்; உண்ணாவிரதம்; சாலை மறியல்; ஆர்ப்பாட்டங்கள்; பன்னாட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நாடுகளின் தூதரகங்கள், தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு முற்றுகை; உணவு புறக்கணிப்பு போராட்டம்; நடைபயணம்; மனிதச்சங்கிலிகள்; உயிரை துச்சமென மதித்து எதிர்கொண்ட தடியடிகள்; போராட்டங்களை அச்சுறுத்திய போலீசை எதிர்த்து 200அடி உயரத்தில் டவர் மீது ஏறி போலீசை பின்வாங்கவைத்த யமஹா போராட்டம் - இப்படி போராட்டங்களின் பூமியாக சிஐடியு தலைமையில் அலைஅலையாய் ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் அணிதிரளும் காட்சியை -ஓரிடத்திலும் செங்கொடி பறக்காது என்றவர்களின் கண்முன்னே - செங்கொடிகளோடு ஆயிரமாயிரம் தொழிலாளிகள் திரளுகிற காட்சியை தமிழகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

கூட்டுப்பேர உரிமைகள் மூலமே தனது உரிமைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிற சமத்துவத்தை நிலைநாட்டியது தொழிற்சங்க இயக்கத்தின் பத்தாண்டு கால வரலாற்றின் சாதனை. போராடுகிற, சங்கம் அமைக்கிற  உரிமைகளை தடைகள் மூலம் தடுக்க முடியாது என்பதை சாதித்த பின்னணியோடு; தொழிற்சங்க இயக்கத்தின் வலுவான அமைப்புகளோடு தனது அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேறுகிற சூழலில் போராடுகிறவர்களுக்கு நம்பிக்கை ஆதர்சமாக காஞ்சி மாவட்ட தொழிற்சங்க இயக்கம் பரிணமிக்கிறது.

பாஜக அரசும் அவர்களுக்கு ஆதரவாக தொங்கு சதையாக செயல்படும் அதிமுக அரசும் ஏவிவிடும் தொழிலாளர் விரோத  கொள்கைகளுக்கு எதிராக, நவீன வேலை பறிப்பு சட்டங்களுக்கு எதிராக களம் காண; தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வில் ஏற்றம் காண காஞ்சியில் நடைபெறும் சிஐடியு 14 வது மாநில மாநாடு தனது எதிர்கால பயணத்தை திட்டமிட இருக்கிறது. தடைகளை எதிர்கொண்டு முன்னேற முடியும் என்ற நம்பிக்கையோடு போராட்ட பூமியாம்காஞ்சியில் சங்கமிப்போம்; வர்க்க போராட்டத்தில் வரலாறு படைப்போம், வாருங்கள்.

இ.முத்துக்குமார்- சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்

;