tamilnadu

img

ஈஷா யோகா மையத்திற்கு என்.எல்.சி. தாராள நிதியுதவி சமூக மேம்பாட்டு நிதி பாழாவதாக உ.வாசுகி சாடல்

கடலூர், மே 11- மத்திய அரசின் என்எல்சி நிறுவனம் அதனுடைய சமூக மேம்பாட்டு நிதியை சிஎஸ்ஆர் எந்த வகையில் செலவிடுகிறது என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி கேள்வி எழுப்பினார். நெய்வேலியில் சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட வெகுஜன அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற கோரிக்கை கருத்தரங்கில் பங்கேற்று உ.வாசுகி பேசியதாவது,என்எல்சி நிறுவனத்தில் அதனுடைய லாபத்தில் 2 விழுக்காடு வரை சமூக மேம்பாட்டு நிதியாக செலவிடலாம் என்பது இந்த நிறுவனத்தின் கொள்கையாக உள்ளது. அதில் 75 விழுக்காடு வரை உள்ளூர் சமூகத் திற்காகவும் செலவழிக்கப்பட வேண்டும் என அந்தக் கொள்கையில் உள்ளது. ஆனால் அதன்படி செலவிட்டுள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது. நலிந்த பிரிவினராக இருக்கும் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்ட மக்கள், குழந்தைகள், பெண் கள் ஆகியவர்களை அதிகாரப்படுத்தும் வகையில் செலவழிக்க வேண் டும் என உள்ளது. இவர்களுக்கு என்எல்சி நிறுவனம் எந்த வகையில் செலவு செய்துள்ளது என பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் நிறுவனத்திற்கு உண்டு. இங்கிருந்து நிலத்தை, வளத்தை எடுத்துக் கொண்டு அதில் லாபம் சம்பாதிக் கும் நிறுவனம். இங்கு இருக்கும் மக்களை கண்டுகொள்ளாமல், இந்த பணத்தை எடுத்து ஜக்கிவாசுதேவ் ஆசிரமத்திற்கு கொடுப்பதுதான் என்எல்சியின் பொருளாதார கொள் கையா?. ஏற்கனவே ஈஷா யோகா மையம் என்ற பெயரில் ஏழைகளின் நிலத்தை ஆக்கிரமித்து, யானைகளின் வழித்தடங்களை மறித்து சிவராத்திரி என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டு வரும் ஜக்கிவாசுதேவ் நிறுவனத் திற்கு என்எல்சி நிறுவனம் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ஏன் பணம் கொடுக்க வேண்டும்?அதேபோல் படேல் சிலை வைப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் சமூக மேம்பாட்டு நிதியில் இருந்து பணத்தை வாரி இறைத்துள்ளனர். என்எல்சி நிறுவனமும் கொடுத்துள் ளதா எனத் தெரியவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளோம். என்எல்சி நிறுவனம் அதனுடைய கொள்கையில் என்ன இருக்கிறதோ அதன்படி நடந்தாலே போதும் நாங்கள் போராடுவதற்கு தேவையே இல்லை என்றார், மத்திய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை சீர்குலைத்து வருகின்றது. 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு கோட் பாடுகளாக மாற்றப்பட்டுள்ளன. அரசின் கொள்கையை எதிர்த்து போராட்டங்கள் தொடர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.இந்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை என்எல்சி தலைவரை சந்தித்து நிறைவேற்ற வலியுறுத்த உள்ளோம். இது தொடக்கம்தான் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த அமைப்புகள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும்.இவ்வாறு வாசுகி பேசினார்.


தீர்மானங்கள்

என்எல்சியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், இங்கு பயிற்சி முடித்தவர்களுக்கும், நிலம், வீடு கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கும் பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும், அவுட்சோர்ஸிங் முறையை கைவிட்டு. உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், தொழிலாளர்களின் சட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், என்எல்சி மாற்று குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு சாலை வசதி, பேருந்து வசதி, சுகாதார வசதி, குடிநீர் வசதி, தெரு மின் விளக்கு வசதி உள்ளிட்ட அடிப் படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், தாண்டவன்குப்பம் பகுதியில் இடம் வழங்காதவர்களுக்கு 3 செண்ட் இடம் வழங்க வேண்டும், மூன்றாவது சுரங்க திட்டப் பணிக்கு விவசாயிகளின் விளை நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கருத்தரங்கத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் கருப்பையன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு என்எல்சி துணைத் தலைவர்கள் டி.ஆறுமுகம், எஸ்.திருஅரசு, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கத் தலைவர் ஏ.வேல்முருகன், பொதுச் செயலாளர் டி.ஜெயராமன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், மாவட்டத் தலைவர் எஸ்.கே.ஏழுமலை, மாதர் சங்க மாவட்டத் தலைவர் வி.மேரி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.கிருஷ்ணன், பொருளாளர் ஆர்.கலைச்செல்வன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கே.சின்னத்தம்பி, மாவட்டச் செயலாளர் எஸ்.குமரவேல் பேசினார்கள். அலுவலக செயலாளர் ஜி குப்புசாமி நன்றி கூறினார்.

;