tamilnadu

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 30

1006 - இதுவரை அறியப்பட்டவற்றிலேயே மிகவும் ஒளிமிகுந்த சூப்பர்நோவா-வாகக் குறிப்பிடப்படும் எஸ்என்-1006, வெள்ளிக்கோளைப் போன்று 16 மடங்குக்கும் அதிகமான பிரகாசத்துடன் தெரிந்தது பதிவு செய்யப்பட்டது. லூப்பஸ் விண்மீன் கூட்டத்தில் காணப்பட்ட இதனை, விருந்தினர் விண்மீன் என்று சீனா, ஜப்பான், இராக், எகிப்து, ஐரோப்பிய நாடுகளின் வானியல் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். சூப்பர்நோவா என்பது, சிலவகை விண்மீன்கள் அவற்றின் இறுதிக் காலத்தில், மிகப்பெரும் ஒளியுடன் வெடித்து, தற்காலிகமாக மிகப் பிரகாசமாகத் தெரிவதைக் குறிக்கும். உலகின் மிகப்பழைமையான சூப்பர்நோவா எச்பி9, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியர்களால் காணப்பட்டு, விண்மீன் வரைபடத்தில் (ஸ்டார் சார்ட்) பதிவு செய்யப்பட்டுள்ளது. விண்மீன் வரைபடம் என்பது, விண்மீன் கூட்டங்கள், மண்டலங்கள் உள்ளிட்ட வான் பொருட்களை அடையாளம் காணப்பயன்படும் இரவு நேர வானின் வரைபடமாகும். (வானியல் அட்டவணை என்பது இதிலிருந்து மாறுபட்டு, வான் பொருட்களின் விபரங்களைத் தெரிவிப்பதாகும்.) இந்தியர்களுக்கு அடுத்து, கி.பி.185இல் சீன வானியல் ஆய்வாளர்கள் எஸ்என்-185 சூப்பர்நோவாவைக் கண்டு பதிவு செய்துள்ளனர். மிக அதிகமாகக் காணப்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்குத் தெரிந்த எஸ்என்-1054 என்ற சூப்பர்நோவாவாகும். கடைசியாக வெறும் கண்ணிற்கே தெரிந்த சூப்பர்நோவாக்களான எஸ்என்-1572, எஸ்என்-1604 ஆகியவை, சூரியக் குடும்பத்திற்கு வெளியேயுள்ள அண்டம் நிலையானது என்ற அரிஸ்டாட்டிலின் கொள்கையையே மாற்றியமைத்தன. 1930களில் அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் வால்ட்டர் பாடே, ஃப்ரிட்ஸ் ஸ்விக்கி ஆகியோர் மிகப் பிரகாசமானவற்றுக்கு சூப்பர்நோவா என்ற பெயரைச் சூட்டும்வரை, நோவா, சூப்பர்நோவா இரண்டும் ஒன்றாகவே அழைக்கப்பட்டுவந்தன. நோவா என்பது இரண்டு விண்மீன்கள் பிரகாசமான ஒளியுடன் இணைந்து புதியதை உருவாக்கும் நிகழ்வாகும். எஸ்என்-1572 சூப்பர்நோவாவைப்பற்றி, பதினாறாம் நூற்றாண்டில் டைகோ பிராஹி, ‘டி நோவா ஸ்டெல்லா’ என்ற தன் நூலில் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து விண்மீன் வெடிப்புக்கு நோவா என்பதே பெயரானது. ‘ஸ்டெல்லா நோவா’ என்ற லத்தீன் சொற்களுக்கு புதிய விண்மீன் என்று பொருள்.


அறிவுக்கடல்

;