தமிழ்நாட்டில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் 72 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 52 மீனவ கிராமங்களில் வசித்து வரும் மக்கள் இயற்கை சீற்றம், ஆழிப்பேரலை போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவித்து வருகிறார்கள். எனவே, அந்த மக்களை பாதுகாக்க குமரி மாவட்ட கடற்கரையோரங்களில் சதுப்பு நிலக் காடுகளை (மாங்ரோ) வளர்க்க அரசு முன்வருமா? என்று கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் செ. ராஜேஷ்குமாரும், மணக்குடி பகுதியில் ரூ.10 கோடி செலவில் மீன்வளத்துறை அமைத்து வரும் பூங்கா பணியால் இயற்கையாக வளர்ந்து சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பும் இயற்கை சீற்றத்திற்கும் அரண்களாக இருந்த சதுப்பு நிலக் காடுகள் அழிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று திமுக உறுப்பினர் ஆஸ்டின் இருவரும் எழுப்பிய வினாக்களுக்கு பதில் அளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,“கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதியில் மண் அரிப்பை தடுக்ககும் வகையில் சவுக்கு மரத் தோட்டங்கள் அதிகமாக உள்ளது. இருந்தாலும் சதுப்பு நிலக் காடுகள் அமைப்பது குறித்து அரசு தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யும் என்றும் மணக்குடி சதுப்பு நிலக் காடுகள் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.