tamilnadu

img

கரும்பு விவசாயிகள் சங்க போராட்டம் வெற்றி

ரூ.123  கோடி  கரும்பு  பண  பாக்கியை  வழங்க  ஒப்புதல்

சென்னை,அக்.18- தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2018-19-ல் விவசாயிகளுக்கு தரவேண்டிய கரும்பு பண பாக்கி ரூ.123 கோடியை அக்டோபர் 21 திங்கள்கிழமை முதல் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு பொதுத்துறை மற்றும் 9 கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகள் பயனடைவார்கள். கரும்பு பண பாக்கியை கேட்டு ஜூலை 16 அன்று சென்னையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை நகர காவல்துறை அனுமதி மறுத்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர். அன்றைய தினம் அமைச்சர் மற்றும் சர்க்கரை துறை ஆணையருடன் நடந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு அறிவித்த விலையை எப்ஆர்பி பாக்கியை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் வழங்கி விடுவதாக மாநில அரசு சார்பில் அமைச்சர்கள் ஒப்புக் கொண்டனர். ஆனால் அதன் படி விவசாயிகளுக்கு பணம் தரவில்லை. கரும்பு பண பாக்கியை கேட்டு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டுறவு ஆலைகளில் தொடர்ச்சியான காத்திருப்பு போராட்டங்களை நடத்தி உடன்பாடு எட்டப்பட்டது. போராட்டத்தின் பலனாக 9 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை ஆலைகள் தர வேண்டிய ரூ.123 கோடி பாக்கியை வரும் திங்கட்கிழமை முதல் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்குகின்றன.

ஆலைகள் ஏற்க வேண்டும்

கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் வட்டியில்லாமல் கரும்பு பயிர்கடன் தருகின்றன. ஒரு ஏக்கருக்கு ரூ.40000 வரை விவசாயிகள் வாங்கும் பயிர்கடனை 15 மாதங்களில் திருப்பி செலுத்திவிட்டால் வட்டியில்லை. 15 மாதங்களுக்கு மேல் மொத்த நாட்களுக்கும் வட்டி அபராத வட்டி செலுத்த வேண்டும். இதே போல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் விவசாயிகள் வட்டி செலுத்த வேண்டும்.  சர்க்கரை ஆலைகள் உரிய காலத்தில் கரும்பு பணத்தை விவசாயிகளுக்கு தராததால், கரும்பு பயிர் கடனை 20 மாதங்கள் கழித்து விவசாயிகள் செலுத்துவதால் வங்கிகளுக்கு வட்டி செலுத்த வேண்டும். இதை கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி சர்க்கரை ஆலைகள் ஏற்க வேண்டுமென தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.  2018-19ல் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்பிய அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் டன்னுக்கு ரூ.137.50 வீதம் மாநில அரசு ஊக்கத்தொகை வழங்கிட ஒப்புக்கொண்ட அடிப்படையில் தீபாவளி பண்டிகைக்கு முன்பு கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு கடந்த ஆண்டை போல நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்று மாநில சர்க்கரை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தனியார் ஆலைகள்

தனியாருக்கு சொந்தமான தரணி, ராஜஸ்ரீ, அம்பிகா, சக்தி சர்க்கரை ஆலைகள் 2018-19ல் அரைத்த கரும்புக்கு ரூ.300 கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளதையும் தீபாவளிக்கு முன்பு விவசாயிகளுக்கு மாநில அரசு பெற்றுத்தர வேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியிருக்கிறார்.

 

;