பெரிய நிறுவனங்களுடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்து கொண்டுவிவசாயம் செய்வதை ஒரு சட்டம் உறுதிப்படுத்துகிறது. “ஏற்கெனவே கரும்பு இந்த வகையில்தான் விவசாயம் செய்யப்படுகிறது. அருகில் உள்ள சர்க்கரை ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, விவசாயிகள் கரும்பைப் பயிரிட்டு, ஆலைக்கு அளிக்கிறார்கள். ஆனால், ஆலைகள் பணம் தர தாமதம் செய்வதை பல முறை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி நடந்தால், சிறிய விவசாயியால் என்ன செய்ய முடியும்? நிறுவனங்களை எதிர்த்து வழக்குத் தொடுக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்புகிறார் ஆய்வாளர் டாக்டர் ஜெயரஞ்சன்.
இந்த மூன்று சட்டங்களையும் தனித்தனியாக பார்க்க முடியாது. ஒன்றாக இணைத்துதான் பார்க்கவேண்டும். சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்டை நடத்தும் நிறுவனங்கள் பெரிய அளவில் தானியங்களை வாங்கிசேமிப்பார்கள். ஆனால், அப்படி செய்ய முடியாத அளவுக்கு சட்டம் இருக்கிறது.அந்தக் கட்டுப்பாட்டை நீக்கத்தான் இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்கிறார் அவர்.இந்தக் கவலைகள் தவிர, தற்போது அரசு விவசாய விளைபொருட்களுக்கு அறிவித்துவரும் குறைந்தபட்ச ஆதார விலை என்பது, இனியும் தொடரும் என்பதை இந்தச் சட்டங்கள் உறுதிசெய்யவில்லை என்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.