tamilnadu

img

புறங்கூறாமை

அறத்தைச் செய்யாது பாவம் செய்யினும்
  அடுத்தவர் புறத்தைப் பேசா திருக்க! 
அறத்தை அழித்து அறநெறி தவறினும் 
  அடுத்தவர் பழித்துப் பேசா திருக்க! 

புறங்கூறிப் பொய்யாய் நடந்துயிர் வாழ்தலின்
 போற்றும் அறத்தொடு சாதலே ஆக்கமாம்!
குறைகளை நேராய்க் கூறிடல் வேண்டும்
  குறைகளைப் பின்னே கூறுதல் கேடு!

பிறரைப் பற்றிக் குறைசொலும் சிறியோன்
   பண்புடன் அறவழி நிற்பவன் அல்லன்!
புறத்தைப் பேசும் பண்பிலான் அவனின்
  பழியை மற்றவர்  பழிக்கப் கெடுவான்!.

இனிக்கப் பழகி  நட்பினைத் தொடரார்
  இல்லாத போது புறங்கூறி இழப்பார்!
இனிக்கும் நண்பர் இல்லாத போது
  இழித்துப் பேசுவோர் யாரைத்தான் பேசார்!

இல்லாத போது பழிப்பவன் உடலை
  இருக்கும் நிலம்மிக சுமப்பதும் அறமோ!
நல்லோர் பிறர்பழி கூறத் துணியார்
  நாடியே தம்பழி எண்ணியே பணிவார்!