மாதர் சங்க போராட்டம் எதிரொலி
செங்கல்பட்டு, ஜூலை 13 - பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்களில், மெத்தனமாக செயல்படும் செய்யூர் காவல் நிலையத்தை கண்டித்து திங்களன்று (ஜூலை 13) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய காவல் நிலைய அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனப் போக்கில் உள்ளனர்.
நயினார் குப்பம் கிராமத்தில் சசிகலா என்ற இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் கடந்தமாதம் 24ந் தேதி சசிகலா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் மற்றொரு குற்றவாளியான தேவேந்திரனை போலீசார் கைது செய்யவில்லை. தழுதாழி குப்பம் கிராமத்தில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி மற்றும் அவரது தாயாருக்கு இணையதளம் மூலம் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கிலும் செய்யூர் காவல்துறை முறையாக செயல்படவில்லை.
காவல்துறையின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செய்யூர் பஜார் வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கலையரசி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச்செயலாளர் வா.பிரமிளா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் நந்தன், செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் பேசினர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், வர்மா குழு பரிந்துரைப்படி குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தினர். தேவேந்திரன் கைது சசிகலாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த தேவேந்திரன், இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக சென்னை வியாசர்பாடியில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே புருசோத்தமன் சரணடைந்துள்ளார்.