சென்னை, மே 13- விழுப்புரத்தில் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 15 வயது பள்ளி மாணவி உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டார். நாட்டு மக்களையே அதிரவைத்த இந்த சம்பவத்தை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விரைந்து விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை விரைவாக வழங்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், சென்னை ஆவடியைச் சேர்ந்த சுமதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதற்கிடையில், மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடத்திவரும் வழக்கறிஞர் நந்தினி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். அவரது வீட்டு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்திற்காக வீட்டை விட்டு வெளியே வந்தபோது வழக்கறிஞர் நந்தினி அவரது தந்தை ஆனந்தன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நந்தினியின் தந்தை ஆனந்தன், “விழுப்புரம் சிறுமியைக் குடிபோதையில் கொடூர மாக எரித்துக் கொன்ற அதிமுக நிர்வாகிகள் முருகன், கலிய பெருமாள் ஆகியோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். டாஸ்மாக்கை மீண்டும் திறந்து இது போன்ற கொலை, குற்றங்கள் செய்ய மக்களை அரசே தூண்டக்கூடாது” என்றார்.