மாநில அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை
சென்னை,பிப்.29- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- மத்திய அரசு அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) நிறை வேற்றிருப்பதும், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) திட்டங்களும் மக்களை மத அடையாளப்படுத்தி பிளவுபடுத்துவதாக அமைந்துள்ளன. இதனால் பாதிக்கப்படக் கூடிய மக்கள் பகுதியினர் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகள் அடிப்படையில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் பாஜக மத்திய அரசும், அதன் கூட்டணி மாநில அரசுகளும் போராட்டங்களை அனுமதிக்க மறுத்து தடை உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகளின் பெயரில் மாநிலம் முழுவதும் வன்முறைக் கலவரத்தை வெடிக்க செய்யும் நோக்கத்தோடு ஜனநாயகப் போராட்டங்களுக்கு எதிரான மோதல் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இது ஜனநாயகப் பண்பிற்கு எதிரானதாகும். தமிழ்நாட்டில் இத்தகைய வகுப்புக் கலவரங்கள் பேரழிவை ஏற்படுத்தும் என்பதை மாநில அரசுக்கு சுட்டிக் காட்டுகிறது. தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து, கலவர பூமியாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மதவெறி, சாதி வெறிக் கும்பல்களின் நடவடிக்கை களுக்கு ஆதரவாகவே தமிழ்நாடு அரசின் அணுகுமுறை அமைந்துள்ளது. மோதல் போராட்டங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இதில் அலட்சி யம் காட்டப்பட்டால் ஏற்படும் விளைவுகளுக்கு தமிழ்நாடு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு முத்தரசன் தெரிவித்திருக்கிறார்.