tamilnadu

img

எங்கும் தமிழ் என்று எடுப்போம் உறுதிப்பாடு... - சோழ.நாகராஜன்

“ஒருவன் அறிந்து வைத்திருக்கும் மொழியில் நீ கருத்தொன்றைச் சொன்னால் அது அவன் தலைக்கு - மூளைக்குப் போகிறது. அதே கருத்தை அவனுக்குச் சொந்தமான மொழியில் அதாவது அவனது தாய்மொழியில் சொன்னால் அது அவனது இதயத்துக்குப் போகிறது!”  - என்று ஒருமுறை கூறினார் தென்னாப்பிரிக்க விடுதலை வீரர் நெல்சன் மண்டேலா.     தாய்மொழி என்பது ஒரு மனிதனுக்குத் தாய்ப்பாலுக்கு நிகரானதெனக் கூறலாம். குழந்தை தன் தாயின் கருப்பையிலிருக்கும்போதே மொழியைக் கற்கத் தொடங்கி விடுகிறது. அதனால்தான் தாய்மொழி என்பது குழந்தையின் உதிரத்தோடு, உணர்வோடு கலந்த மொழியாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கருது கிறார்கள். அதனால்தான் எந்தத் துறை அறிவை எந்த மொழியில் பெற்றாலும் ஒரு மனிதனால் தன் தாய்மொழி யில்தான் வெகு இயல்பாகச் சிந்திக்க இயலும் என்றும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

நவீனக் கல்வியை ஆங்கிலவழியில் பயிலும் புதிய தலைமுறையினரிடையே வயது செல்லச் செல்ல நினைவாற்றலில் இழப்பு ஏற்படுகிறதென்றும் ஓர் ஆய்வின் முடிவில் தெரிய வந்திருக்கிறது. நியூசிலாந்தின் மௌரீஸ் பழங்குடியினரிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வு பல திடுக்கிடும் உண்மைகளை உலகிற்கு வெளிச்ச மிட்டிருக்கிறது. ‘டிமென்சியா’ - என்னும் நினைவாற்றல் இழப்புக் குறைபாடு இந்தப் பழங்குடியின முதியவர்க ளிடத்தில் இல்லை என்பதை ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். 

‘காபா ஹாகா’  - எனும் குழு நடனம் அவர்களது பாரம்ப ரியக் கலைகளில் முதன்மையான ஒன்று. இன்றும் தமது மரபார்ந்த தொடர்ச்சியாக இந்த நடனத்தை அவர்கள் ஆடிவருவது அவர்களிடையே நினைவாற்றல் இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் காரணியாக அமைந்தி ருக்கிறதா என்ற கோணத்தில் ஆக்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.  தாய்மொழி வழிக் கல்வியும், மரபார்ந்த கலை மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளில் தொடர் ஈடுபாடும் கொண்டிருப்போரிடம் நினைவாற்றல் இழப்பு இல்லாமலிருந்தது வியப்பையே தந்தது. 

சுகாதாரக் குறைபாடுகள், சமூக-பொருளாதாரத்தில் கீழ்நிலை, பரவலாகிவிட்ட புகைக்கும் பழக்கமும் அதன் விளைவான இதய நோய்த் தாக்கும் மலிந்துள்ள இந்தப் பழங்குடியினத்தின் இளைய தலைமுறையிடம் காணப்படும் ‘டிமென்சியா’ குறைபாடு முதியவர்களிடையே இல்லாதது அவர்கள் ஆங்கிலத்தோடு தமது தாய்மொழியான டொரியோவையும் மறவாது பேணி வருவதே என்கிறார்கள் மொழியியல் வல்லுனர்கள்.

இரண்டு வாரங்களுக்கு ஒன்று எனும் விகிதத்தில் உலகின் எங்காவதொரு மூலையில் ஒரு மொழி தன் உயிரை விடுவதாக - அழிந்து வருவதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. உலகில் அழிவின் விளிம்பை நேக்கிப் போய்க்கொண்டிருக்கும் மொழிகளின் பட்டியலைக் கவலையோடு ஐ.நா. வின் யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் அழிந்துவரும் மொழிகளின் பட்டியலும் தனியே தரப்பட்டிருக்கிறது. அப்படி மொழி அழிவதற்கான காரணங்களை நம் தமிழும் பெற்றுவருவது தமிழர்களான நமக்கெல்லாம் கவலையளிக்கும் செய்திதான். தென்னமெரிக்கப் பழங்குடியினர் பேசும் துபியான் மொழி குவாரனி என்றும் அழைக்கப்படுகிறது. அந்த குவாரனி மொழி அழிந்துவிடப்போகிறது என்கிற கவலை அம்மக்களிடையே பெரும் துயரமாக உள்ளது. அதனால் அவர்கள் இப்படியொரு சொலவடையையே உருவாக்கிக்கொண்டுள்ளார்கள்:

“குவாரனி அழிந்துவிட்டால் இந்த உலகத்தை அழிவுகளிலிருந்து காப்பாற்று என்று எப்படி இறைவனிடம் பேசி வேண்டிக்கொள்ள இயலும்?” அந்தப் பழங்குடிகளுக்குத் தங்கள் இறைவனுக்குத் தங்களின் மொழிதான் தெரிந்திருக்க நியாயமிருப்பதாக ஒரு எண்ணம். அதாவது, அவர்களுக்கு அவர்களின் சொந்தத்  தாய்மொழியே ‘தேவ பாஷை’.

தாய்மொழியை முறையாகக் கல்வித்துறையின் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால் சொல்லவொண்ணாத நற்பலன்களை அது உண்டுபண்ணும் என்பதை அறிவியலாளர்கள் மெய்ப்பித்திருக்கிறார்கள். கல்வி யின் முதன்மை நோக்கமான சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கும், படைப்பாற்றல் மேம்பாட்டிற்கும் அவரவர் தாய்மொழிவழிக் கல்வியே மிகவும் சிறந்தது என்பதும் அறிவியல்ரீதியில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தான் சிந்திக்கிற மொழியாகிய தாய்மொழியில் அல்லாது வேற்று மொழியில் பெறுகிற கல்வியானது எந்த வகையிலும் முழு நிறைவை எட்டாததாகவே இருக்கும். தமிழ்நாட்டில் ஆங்கிலவழிக் கல்வி என்பது அறிவியலுக்குப் புறம்பானதும்கூட.

முன்னாள் காலனி நாடுகளில் ஒன்றான நம் இந்தியாவில், குறிப்பாக நம் தமிழகத்தில் இன்றளவும் ஆங்கில மோகம் என்பது தலைவிரித்து ஆடுகிற ஒன்றாகவே தொடர்ந்துவருவது அவலம்தான். உலகின் மூத்த மொழியான தமிழ் எனும் தாய்மொழியினைக் கற்றுக்கொள்ளாத தலைமுறைகளை உருவாக்கி விட்டோம். ஆங்கிலம்தான் அறிவு என்று நம்புவது எத்துணை அறிவுக்குறைவு என்பதை எண்ண மறுக்கும் தமிழர்கள், தாய் மொழிவழிக் கல்வி என்பதுதான் இயல்பான, எளிய செயல்பாடு; மனம் ஒப்ப மேற்கொள் ளப்படும் செயல்பாடு எனும் அறிவியல் உண்மை உணர்ந்தோமில்லை.

ஆங்கிலத்தை அல்லது வேறு எந்த மொழியையும் ஒரு மொழியாகக் கற்பதில் பிழையே இல்லைதான். ஆனால், இங்கு நடப்பது ஒரு தலைகீழ்ப் பிழையல்லவா? அமெரிக்க பர்க்லி பல்கலை.யின் தமிழ்ப்பீடப் பேராசிரியராக இருந்த ஜார்ஜ் ஹார்ட் கூறுவது கவனிக்கத்தக்கது: “இந்தியாவிலிருந்து ஆங்கிலவழிக் கல்வி கற்றுக்கொண்டு அமெரிக்காவுக்கு வேலைக்கு வருகிறவர்களால் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் அமெரிக்கர்களைப்போல அத்தனை புலமையோடு வெளிப்பட இயலவில்லை” - என்கிறார் அவர். ஆனால், ஒரு மொழியாக மட்டும் ஆங்கிலத்தையோ அல்லது வேறு எந்த மொழியையோ பிழையறக் கற்ற ஒருவரால் அந்த  மொழியில் நல்ல புலமையை வெளிப்படுத்த இயலும் என்பது மொழியியல் அறிஞர்களின் கூற்று. நமது நாட்டிலோ தாய்மொழியையும் கைவிட்டுவிட்டு, ஆங்கி லத்திலும் தோய்ந்த அறிவைப் பெறாத நிலையிலேயே பெரும்பாலான மாணவர்களின் நிலை இருக்கிறது.

தமிழின் தொன்மை குறித்த அறிவியல்பூர்வ உண்மைகள் ஒவ்வொரு நாளும் வெளிவந்த வண்ண மிருக்கும் கீழடி அகழாய்வு காலத்தில் வாழும் பேறு பெற்ற நாம், நமது தாய்மொழியாம் தமிழ்வழிக் கல்வி என்பதை உறுதிப்படுத்தும் கடப்பாடும் கொண்டிருக்கி றோம் என்பதை உணர்தல் அவசியம். அத்துடன், இலக்கிய வளம் நிறைந்த இன்தமிழை அறிவியல் தமிழா கவும், கணிதத் தமிழாகவும், கணினித் தமிழாகவும், சட்டத்துறைத் தமிழாகவும் மேலும் மேலும் வளர்த்தெடுப்ப தும், அந்தந்தத் துறைகளில் தமிழின் இருப்பைத் தற்காலப்படுத்துவதும் நம்முன்னுள்ள மிகப்பெரும் சவாலாகும்.  உயர் கல்வியில் ஆங்கிலத்தையே வைத்துக்கொண்டு, தொடக்கக் கல்வியை, உயர்நிலை - மேல்நிலைக் கல்வியை தமிழ்வழி என வைத்திருப்பதால் யாதொரு பலனும் இல்லை என்பதையும் கல்வியாளர்களும், அரசி னரும் உணர வேண்டும். மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் தமிழ்வழியை உறுதிப்படுத்தாமல் பள்ளிக் கல்வியில் மட்டும் தமிழை வலியுறுத்துவது அத்துணை அறிவுடைமை ஆகாது. உயர் கல்வியையும் தாய்மொழிமயமாக்குவது மட்டுமல்லாமல், தமிழ் மொழியைப் பயின்ற, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்க ளுக்கு அரசு வேலை வாய்ப்புகளிலும் மிகக் கணிசமான வாய்ப்புகளை ஏற்படுத்துவதும் முக்கியமாகும்.

முன்னெப்போதுமில்லாத அளவிற்கு இந்தி மொழித் திணிப்பை எல்லா முனைகளிலும் அமலாக்கத் துடிக்கும் சமஸ்கிருததாசர்களின் மத்திய ஆட்சி. அவர்களின் கட்டளைகளுக்கு ஆடும் தலையாட்டி பொம்மையென மாநில ஆட்சி. மொழிவழி தேசிய இனங்களின் நலன்க ளைத் துச்சமென எண்ணும் இந்த நாசகரப் போக்குகளுக்கு எதிராகத்தான் நாம்  கல்வியின் அனைத்துப் பிரிவுகளிலும் தமிழையே முதல்நிலையில் கோலோச்சச் செய்வதற்கான அனைத்துவிதப் போராட்டங்களையும் முன்னெடுப்பதும், ஆக்கப்பூர்வச் செயல்திட்டங்களைத் தீட்டுவதும் உலகத் தாய்மொழி நாளையொட்டி  நாம் மேற்கொள்ளவேண்டிய உறுதிப்பாடாக இருக்கட்டும்... எடுத்துக்கொள்ள வேண்டிய சிறப்பு உறுதிமொழியாக இருக்கட்டும்!

;