tamilnadu

img

இலங்கை நாடாளுமன்ற தேர்தலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் ...  

இலங்கையில் சுதந்திரம் பெற்றதன் பின் பதினாறாவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் மாதம் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டு கோவிட் 19 தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பின்பு வரும் ஆகஸ்ட் 5 அன்று நடைபெற இருக்கிறது. 
பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை தேர்வு செய்கின்ற நடைமுறையை இந்தியா உட்பட  ஏராளமான நாடுகள்  பிரித்தானிய தேர்தல் முறையான ஒற்றைத் தொகுதி தேர்தல் வாக்களிப்பு முறையை நீண்டகாலமாக பின்பற்றி வருகின்றன. அதாவது அளிக்கப்பட்ட வாக்குகளில் அதிக வாக்குகளைப் பெற்றவர் ( 50 % மேல்) என்ற கணிப்பு இல்லாமல்  போட்டியாளர்களுக்கிடையில் அதிக வாக்குகளைப் பெறுபவர் மட்டும்  தேர்ந்தெடுக்கப்படும்  நடை முறையாகும். இதன் மூலம் உண்மையான பிரதிநிதித்துவம் அனைத்து சமூக மக்களுக்கும் கிடைப்பதில்லை என சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.  இக்குறைபாட்டை நீக்கும் வகையில் முழு தேசத்திற்குமான பிரதிநிதித்துவத்தை  உத்தரவாதப் படுத்தும் வகையில் இலங்கையில் 1978 இல் புதிய அரசியல் அமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை  அறிமுகப்படுத்தப்படலாயிற்று. 

விகிதாசார தேர்தல் முறை
விகிதாசார தேர்தல்  என்பது ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகளில் வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்துக்கமைய  வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் ஒரு தேர்தல் முறையாகும்.  அளிக்கப்படும் வாக்குகளில் அதிகமான வாக்குகளைப் பெறுபவரைத் தேர்ந்தெடுக்கும் ஒற்றை உறுப்பினர் தொகுதி தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை நீக்கும் நோக்கில்  நேரடி தேர்தல் முறைக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டதே  விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையாகும்.  இதன் மூலம் எல்லா வாக்காளர்களுக்கும் எல்லா கருத்துக்களுக்கும் பெருமளவில் பிரதிநிதித்துவம் உத்தரவாதப்படுத்தப்படுவதைக் காணலாம்.    

இலங்கையின் 9 மாகாணங்களும் 22 தேர்தல் மாவட்டங்களாக கொள்ளப்படுவதன் காரணமாக ஒரே தேர்தலிலேயே மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் ஒரு விகிதாசார முறைமையைக் காண முடிகிறது.  இதன் அடிப்படையில்  இலங்கை பாராளுமன்றம், மாகாண சபைகள்,  உள்ளாட்சி அமைப்புகள் என்பனவற்றிற்கான  தேர்தல் விகிதாசார பிரதிநித்துவ முறையில் நடை பெற்று வருவதைக் காணலாம்.  இதன் தொடர்ச்சியாக மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் ஆகஸ்ட் ஐந்தில் நடைபெற இருக்கிறது.

தேர்தல் முறையும் தேர்தல் மாவட்டங்களும்
இலங்கையின் தேர்தல் முறையானது இலங்கை முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட  உறுப்பினர்கள் ஊடாக கட்சிகள்  பெற்ற வாக்குகளின் அடிப்படையில் 196 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தேர்வு செய்யப்படுவதுடன், ஒவ்வொரு கட்சியும் தேசிய அளவில் பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் மேலும் 29 பேர் தெரிவாகி, இறுதியில் நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் இடம் பெறுவர். பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சியின் தலைவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

19 வது  திருத்தத்தின் படி  இரண்டு முறைக்கு மேல் அதிபராகும் வாய்ப்பு அரசியல் சட்டத்தில் இடம் இல்லாததன் காரணமாக கடந்த வருட அதிபர் தேர்தலில் தனது தம்பியான கோத்தபய ராஜபக்சேவை அதிபராக்கிய  மகிந்த ராஜபக்சே தற்போது  பிரதமர் கனவுடன் பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்கி இருப்பது இலங்கை தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அம்சமாக  பார்க்கப்படுகிறது.2,17,00000 என்ற மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில் வரும் தேர்தலில் 1,62,63885 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இத்தேர்தலில் 46 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 3652  பேரும்  சுயேட்சை குழுக்களைச்  சேர்ந்த 3800 பேரும் என மொத்தம் 7452 வேட்பாளர்கள்  22  மாவட்டங்களில் 196 இடங்களுக்கு போட்டி இடுகின்றனர்.

இலங்கையில் 25 நிர்வாக மாவட்டங்கள் இருந்தபோதும் அவை தேர்தலுக்காக 22  மாவட்டங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. வட இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்துடன் முல்லைத்தீவு என்ற நிர்வாக மாவட்டமும், வவுனியா மாவட்டத்துடன் மன்னார் , கிளிநொச்சி என்ற இரண்டு மாவட்டங்களையும் இணைத்து 22 மாவட்டங்கள் என்ற அடிப்படையில் தேர்தல் நடைபெறும்.  22 மாவட்டங்களிலும் போட்டியிடும் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் போட்டியிடும் வேட்பாளர்களை  மாவட்ட வாரியாக திறந்த பட்டியல் மூலம் தேர்தல் ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதுவும் ஆரம்பத்தில்  பகிரங்கமாக அறிவிக்கப்படாத  மூடிய கட்சிப்பட்டியலாக இருந்த நிலை பின்னர் யாவரும் அறிந்த  திறந்த கட்சிப்பட்டியல் முறைக்கு  மாற்றப்பட்டது.  இவ்வாறு இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் கட்சிப் பட்டியல் மூலம் அல்லது சுயேட்சைக் குழுக்களின் பட்டியல் மூலமே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.  மேலும் அந்தந்த தேர்தல் மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையை விட 3 மேலதிக வேட்பாளர்கள் பட்டியலில் அடங்கி இருக்க வேண்டும். உதாரணமாக நுவரெலியா மாவட்டத்திற்கு 8 உறுப்பினர்களை தேர்வு செய்திட 11 பேர் கொண்ட பட்டியலை வெளியிட வேண்டும்.  ஒருவர் தனிப்பட்ட ரீதியாக போட்டியிட முடியாது.  ஒரு கட்சி சார்ந்தோ அல்லது ஒரு குழு சார்ந்தோ மட்டுமே போட்டியிட முடியும்.  இதனால் தனிப்பட்ட ஜாதி மத மொழி என்ற இனவாத பிரச்சாரத்திற்கு பெரிய அளவில் இடமில்லாத நிலை உருவாவதையும் காணலாம்.

சிறப்பான ஜனநாயக அம்சங்கள்
இலங்கையின் விகிதாசார தேர்தல் நடைமுறையில் ஒவ்வொரு மாவட்டத்தின் மக்கள்தொகை , வாக்காளர் எண்ணிக்கை என்பவற்றிற்கு ஏற்ப பிரதிநிதிகளின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்படுவதும் சிறப்பான ஜனநாயக அம்சமாகும். இதனடிப்படையில் இலங்கையின் தேர்தல் மாவட்டங்களை பார்த்தோமேயானால் அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பு தேர்தல் மாவட்டத்திற்கு 19 பிரதிநிதிகளும் குறைந்த மக்கள் தொகை கொண்ட திருகோணமலை மாவட்டத்திற்கு 4 பிரதிநிதிகளும் தேர்வாகும் வண்ணம் பிரதிநிதித்துவம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்படும் வாக்குகளின் விகிதாசாரத்துக்கமைய கட்சி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவது சிறந்த பிரதிநிதித்துவ முறையாகும்.  உதாரணமாக கடந்த 2015 ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை பொதுத் தேர்தலில் 45.66 %  வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி 106 இடங்களையும் ,  மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி 42.38 %  வாக்குகளைப் பெற்றமையால் 95 இடங்களையும் பெற்றன.  இதன் மூலம் குறைந்த விகிதாசார வாக்குகளைப்பெறும் கட்சி ஆட்சி அமைக்க முடியாது என்ற உண்மையான ஜனநாயக அம்சம் நிலை நிறுத்தப்படுகிறது. அதே நேரம் இந்திய தேர்தல் முறை இதற்கு நேர் மாறாக இருப்பதையும் காணலாம்.  

இலங்கையில் இவ்வாறான மாவட்ட வாரியான விகிதாசார பிரதிநிதித்துவம் இருப்பதனால் சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கும் வழி ஏற்படுகிறது.  உதாரணமாக ஒற்றை தொகுதி தேர்தல் முறையில் மலையக மக்களுக்கு குறைவான பிரதி நிதித்துவம் கிடைத்து வந்த நிலையில் தற்போதைய மாவட்ட விகிதாசார முறையால் குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவம் பெறக் கூடியதாக இருக்கிறது. இன்னும் சற்று தெளிவாக கூறின் 68% மலையக மக்கள் வாழும் நுவரெலியா மாவட்டத்திலிருந்து 5 மலையக தமிழ் வேட்பாளர்கள் கடந்த தேர்தலில் வெற்றி பெறவும் வாய்ப்பு கிடைத்தமை கவனிக்கத் தக்கதாகும். இதே போன்று மிக குறைவான சிங்கள மக்கள் உள்ள வவுனியா மாவட்டத்திலிருந்து அவர்களுக்கான சிங்கள பிரதிநிதி தெரிவு செய்யப்படுவதற்கான  வாய்ப்பும்  விகிதாசார அமைப்பில் பெற முடியும்.

தேர்தல் நடை முறை
இவ்வாறு 225 உறுப்பினர்களை உள்ளடக்கிய பாராளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்களை தேர்வு செய்திடும் பொதுத்தேர்தலில் ஒரு வாக்காளருக்கு 3 உறுப்பினர்களை தேர்வு செய்திடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால் ஒருவருக்கு  3 வாக்குரிமை அவருக்கான தேர்தல் மாவட்டத்தில் வழங்கப்படுகிறது.  இதன்படி  வாக்காளர் ஒருவர் தனக்கு விருப்பமான ஒரு கட்சிக்கு வாக்களிக்க  வேண்டும். அதன் பின் அக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஆகக் கூடிய மூவருக்கும் தனது விருப்பத் தேர்வை அளிக்கலாம். அதாவது ஒரு கட்சியை தேர்வு செய்வது கட்டாயம். ஆனால் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பது கட்டாயமல்ல.

தேசியப்பட்டியல் தேர்வு
தேர்தலில் நாடு தழுவிய அளவில் கட்சிகள் பெறும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு  ஏற்ற வகையில் விகிதாசார அடிப்படையில் தேசிய பட்டியல் இடங்கள் வழங்கப்படும்.  உதாரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் 45.66%  வாக்குகளைப் பெற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி தேசியப்பட்டியல் மூலம் 13 உறுப்பினர்களை மேலதிகமாக பெற முடிந்தது.  42.38% வாக்குகளைப் பெற்றிருந்த  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 12 உறுப்பினர்களையும் , 4.62 % வாக்குகளைப் பெற்றிருந்த தமிழ் தேசிய கூட்டணி 2  மேலதிக உறுப்பினர்களையும் , 4.87 %  வாக்குகளைப் பெற்றிருந்த மக்கள் விடுதலை முன்னணி  2 மேலதிக இடங்களையும்  பெற முடிந்தது.இவ்வாறு பரந்து பட்ட ஜனநாயக அடிப்படையில் 225 பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக ஏழு இலட்சம் பேர் வாக்களிக்கும் தபால் வாக்களிப்பு  ஜூலை 14  இல் தொடங்கி 5 நாட்களாக நடந்து முடிந்துள்ளன.

அரசியல் களத்தில் சிறுபான்மையினர் வாக்கு
இலங்கையில் 2015 ம்  வருடத்தில் நடந்த அதிபர் தேர்தலில் சிறு பான்மை மக்களாகிய இலங்கைத் தமிழர், இஸ்லாமியர், மலையகத் தமிழர் மிகப்பெரும் எண்ணிக்கையில் இனவாதத்திற்கு எதிராக அதாவது கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களித்த போதும் தென்னிலங்கை  மக்களின் பெரும்பான்மை ஆதரவு காரணமாக 2.25%  ( 52.25 % )மேலதிக வாக்குகளால் கோத்தபய அதிபராக வெற்றி பெற முடிந்தது.

இந்திய அரசியலில் அண்மைக்காலங்களில் பா.ஜ.க. கட்சியானது மத ரீதியாக மக்களை அணி திரட்டுவதைப்போன்று இலங்கையிலும் ராஜபக்ச அணியினர் சிங்கள பெரும்பான்மையையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்க வந்த இரட்சகர்கள் தாங்கள் மட்டுமே என்ற எண்ணத்தை மக்களிடம் விதைத்து அறுவடை செய்கின்ற போக்கு வளர்ந்து வருகிறது. எனவே சிறுபான்மையினர் ஆட்சியை தீர்மானிக்கும் நிலை வலு இழந்து வருவதை கவலையுடன் கவனிக்க வேண்டும்.

கட்டுரையாளர் :  பேரா. S.Z.ஜெயசிங்.... முன்னாள் இலங்கை பேராதனை, பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர்.

Mail : jeyasinghsz24@gmail.com

;