tamilnadu

img

வீடுகளில் உயரட்டும் செங்கொடி - டி.எம்.மூர்த்தி (மாநில பொதுச் செயலாளர். ஏஐடியுசி ) , ஜி.சுகுமாறன் ( மாநில பொதுச் செயலாளர். சிஐடியு )

ஏஐடியுசி - சிஐடியு மே தின சூளுரை 

நவீன உலகம் இதுவரை கண்டிராத வகை யில், கிருமித் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மனிதகுலமே வீடுகளுக்குள்ளாக பல வார காலம் முடங்கிக் கிடக்கும் சூழலில் இந்த ஆண்டு மே தினம் வந்திருக்கிறது. உழைக்கும் வர்க்கம் தன்னையும், மானுட சமூகத்தையும் பாதுகாப்ப தற்கும், உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், இவற்றுக்கு எதிரான சக்திகளை முறியடிப்பதற்காக ஒன்று திரள, ஒருமைப் பாட்டைப் பேண உத்வேகம் ஊட்டுகிற திருநாளான இந்த மே நன்னாளில் ஏஐடியுசி - சிஐடியு சார்பாக அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

வீரவணக்கம் செலுத்துகிறோம்!

கொரோனா வைரஸ் பாதித்துள்ள நபர் யாரேனும்  அருகில்  வந்துவிடக் கூடாது என்பதால் வீட்டை விட்டு வெளியே வரா தீர்கள் என்ற அறிவுரைக்கு அனைவரும் ஆட்பட்டு இருக்கும் போது, அனைத்து நாட்களிலும் அனேக நோயாளிகளைத் தொட்டு மருத்துவம் பார்த்து, தூய்மை காப்பதற்கு பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம். போர்முனையில் நிற்பதை விட அதிக மன திட்பமும், அர்ப்பணிப்பும், தன்னல மறுப்பும் தேவைப்படும் பணி இது. தினக் கூலிகளாகப் பல்லாண்டு பணிபுரிந்தாலும் கூட, பணி நிரந்தரமும் இணையான ஊதியம் பெற முடியாது தவிக்கும் பல்லாயிரக்கணக்கான மருத்துவப் பணியாளர்க ளில் ஒருவர் கூட இந்த கொடூர சூழலில் பணியை விட்டுவிட்டு ஓடவில்லை என்பதை நோக்கும்போது இதுதான் தொழிலாளி வர்க்கத்தின் திண்மை என நாம் பெருமிதப்படுகிறோம்.

இரு வேறுபட்ட அணுகுமுறைகள்

புதிய தாராளமயக் கொள்கை, புதிய ஓய்வூதியத் திட்டம் போல இந்தக் கிருமிக்கும்  புதிய கொரோனா வைரஸ் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள். தனியார்மயத்தி னால் ஏற்படும் அபாயத்தையும், பொதுத்துறையின் அவசி யத்தையும் இந்த கிருமித்தொற்று தெளிவாக எடுத்துக் காட்டி இருக்கிறது. அதுபோலவே மக்களை கையாள்வதில்  முதலாளித்துவ வல்லரசுகளுக்கும், பொதுவுடமை நாடு களுக்கும் இடையிலான காணப்படும் வேறுபாடும் பளிச்சென வெளிப்பட்டுள்ளது.

செல்வ வளம் மிக்க வல்லரசு நாடு என   நம்பப்பட்டு வரும் அமெரிக்காவில்தான், கிருமித் தொற்றுக்கு ஆளான வர்களும் அதிகம்; மரண விகிதமும் அதிகம். செல்வம் கொழிக்கும் நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் போன்றவை கூட சமாளிக்கவே முடியாமல் திணறு கின்றன. மருத்துவ சிகிச்சைக்கு ஏராளமாக பணம் தேவைப்படு வதால், ஏழைகள் தமக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படும் முன்பே இறந்து போகும் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.

மறுபுறத்தில், இன்னதென்று அறிய இயலாத  இக்கிருமி பரவிய சீனாவில், அதைக் கண்டறிந்து, இதைப் பரவ விடாமல் தடுப்பதில் ஊரடங்கு தான் முதல் நிபந்தனை என்று தீர்மா னித்து, அமுல் நடத்தி, உலகிற்கே வழிகாட்டி இருக்கிறார்கள். ஒரே வாரத்துக்குள் 2000 படுக்கைகளோடு அனைத்து மருத்துவ வசதிகளையும் கொண்ட மருத்துவமனைகளைக் கட்டி, எல்லோருக்கும் இலவச மருத்துவத்தையும், வீடுகளில் அடைபட்டு இருந்தவர்களுக்கு வாசற்படியில் உணவுப் பொ ருட்களையும் கொண்டு சென்று வழங்கினர். கிருமி பரவுவ தையும், மரண விகிதத்தையும் வெகுவாக கட்டுப்படுத்தி கிட்டத்தட்ட இல்லை என்ற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

தோழர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் வளர்ந்த சின்னஞ்சிறிய நாடான கியூபா, தனது இரண்டு லட்சம் மருத்து வர்களை முதலாளித்துவ நாடுகளுக்கு அனுப்பி சிகிச்சை தந்து பேருதவி செய்திருக்கிறது. தன்மீது பொருளாதாரத் தடை விதித்து, உணவுப் பொருட்களைக்கூட ஏற்றுமதி செய்ய மறுத்த அந்த நாடுகளுக்கு  மருத்துவர்களை அனுப்பி வைத்தி ருப்பது மனிதநேயத்தின் மிகச்சிறந்த போற்றத்தக்க எடுத்துக்காட்டாகும்.

பட்டினி கிடந்து சாவதை விட...

இந்தியாவில் எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பிரதமர் அவர்கள், ஏதோ தானே ஆய்வு செய்து இந்த முறையை கண்டறிந்தது போல பெரும் விளம்பரங்கள் வேறு செய்யப்பட்டன. வேலை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தம் ஊருக்குப் போக முடிய வில்லை. வெளியூர்களுக்கு பல்வேறு காரணங்களால் போன வர்களால் ஊர் திரும்ப முடியவில்லை. அன்றாடம் உழைத்து ஊதியம் ஈட்டி, அதன்மூலம் வீட்டில் உணவு சமைப்பவர்கள் பல கோடிப்பேர் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் திகைத்து நிற்கி றார்கள். பட்டினி கிடந்து சாவதைவிட, தம் சொந்த ஊருக்கு  ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சேர்வதே மேல் என நினைத்து பல்லாயிரம் பேர் பயணப் பட்டனர். அதை அறிந்த பின்னும் அசைவு ஏதும் இல்லாமல், அவர்களின் உயிரை விதியின் கைகளில் விட்டுவிட்ட அலட்சி யம், இந்த அரசின் கொடூரத் தன்மையை விளக்குகிறது.

ஊரடங்குக்குப்பின் நிதியமைச்சர் 1.75 லட்சம் கோடி ரூபாய்க்கு நிவாரணத் திட்டம் என்ற பெயரில் ஒன்றை அறிவித்தார். அதில் 90 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்கனவே இதே துறைகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. பிராவிடண்ட் பண்டிலும், கட்டுமான தொழிலாளர் நல வாரியங்களிலும் இருக்கும் தொழிலாளர்களின் சொந்த பணத்தை அவர்க ளுக்கு கொடுக்க வழி செய்துவிட்டு, அதை அரசு தரும் நிவார ணமாக சித்தரித்தது அநியாயமானதாகும்.

சூறையாடப்படும் பொதுத்துறை

ஏற்கனவே 25 ஆண்டுகளுக்கு மேலாக உலகமே பொரு ளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. இந்த புதிய கொரோனா அந்த நெருக்கடியை இன்னும் ஆழப்படுத்தி விட்டது. ஊரடங்கு காலம் முடிந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் போது சந்தையின் இயக்கம் எப்படி இருக்கும் என்று யாராலும் துல்லியமாக கணிக்க முடி யாத நிலை நிலவுகிறது. இது எல்லா நாடுகளின் பொருளா தாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவிலும் அதன் பிரதிபலிப்பு இருக்கும்.

உலக பொருளாதார நெருக்கடியின் ஆரம்ப ஆண்டுக ளில், இந்தியாவின் வலிமை வாய்ந்த பொதுத்துறை நிறுவ னங்களின் உற்பத்தியும், சேவையும், தேசியமயமாக்கப்பட்ட உறுதியான வங்கித்துறையும் இந்தியாவை நிலை குலைய விடாமல் பாதுகாத்து காப்பாற்றின. பன்னாட்டு நிறுவனங்கள் இதைக் கூர்ந்து கவனித்து அவற்றை கைப்பற்றி விட முடிவு செய்தன.

இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த பின்பு, மோடி அர சாங்கத்தின் நடவடிக்கை இன்னும் அதிகாரம் கொண்டதாக மாறியுள்ளது. ரயில்வேயும் அதன் அளப்பரிய சொத்துக்க ளும் தனியார்மயம் ஆகின்றன. பாதுகாப்புத்துறை தொழிற் சாலைகளில் கூட 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப் பட்டுவிட்டது. அம்பானியின் ஜியோ நிறுவன வளர்ச்சிக்காக, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் பலி கொடுக் கப்பட்டு விட்டது. எண்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதன் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களை மட்டம் தட்டி, தனியார் காப்பீட்டு நிறுவனங்களை அனுமதித்து அரசாங்கமே அவற்றுக்கு ஆதரவு தந்து வருகிறது.

36 மோசடி முதலாளிகள் ஓட்டம்

ஆண்டுதோறும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மான தொகைக்கு பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப் படுகின்றன. மறுபுறத்தில் கார்ப்பரேட் வரி தளர்த்தப்பட்டு 1.45 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை தனியாருக்கு தரப்பட்டது. 7 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கார்ப்ப ரேட் கடன்களை அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. கார்ப்பரேட் தனியார் முதலாளிகள்  வேண்டுமென்றே திருப்பி செலுத்தாத 13 லட்சம் கோடி ரூபாய் வங்கி கடன்கள் வசூலிக்கப் படாமலேயே உள்ளன. பல்லாயிரம் கோடி ரூபாய்களை வங்கிகளில் கடன் வாங்கிய 36 முதலாளிகள், கடந்த 5 ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி இருக்கிறார்கள். இது போதாதென்று கார்ப்பரேட்டுகள் கட்ட வேண்டிய வரி நிலுவை தொகை 8 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறது

ஆனால் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளும், அவர்கள் சார்ந்த மருத்துவமனைகளும் ஓடி ஒளிந்து கொண்ட இந்த  கிருமித்தொற்று காலத்தில், மத்திய, மாநில அரசுப் பணி யாளர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள், பாதுகாப்புத்துறை,  ரயில்வே, அஞ்சல், மின்சாரம், எண்ணெய் நிறுவனங்கள், வங்கி, தொலைத்தொடர்பு, நிலக்கரிச் சுரங்கங்கள் ஆகிய பொதுத்துறை அமைப்புகளில் ஊழியர்கள் தொடர்ந்து தமது பணிகளை செய்து நாடு முடங்கி விடாமல் பாதுகாத்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள் உரித்தாகுக!

தன்னிச்சையான உத்தரவு 

அவர்களைப் பாராட்டுவதற்கு பதிலாக, மத்திய அரசு அவர்களை பொருளாதார ரீதியாக தண்டிக்கும் நடவடிக்கை களில் ஈடுபட்டிருக்கிறது. ராணுவ வீரர்கள் ரயில்வே ஊழியர் கள் உள்ளிட்ட 45 லட்சம் மத்திய அரசு பணியாளர்களுக்கும், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட 68 லட்சம் ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி நிலு வைத் தொகை மற்றும் அகவிலைப்படி உயர்வை 18 மாதத்து க்கு நிறுத்தி வைத்து தன்னிச்சையான உத்தரவை அரசு பிறப்பித்திருக்கிறது. இத்துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட பல ஊழியர் சங்கங்கள் இருந்தும், அவற்றை கலந்தாலோ சிக்கவும் முன் தகவல் அளிக்கவும் கூட இல்லை.

44 சட்டங்களை 4 சட்ட தொகுப்புகள் ஆக்கியதில் சம்பளச் சட்டத் தொகுப்பு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. மீதி மூன்றையும் நாடாளுமன்ற நிலைக்குழு விவா தித்துக் கொண்டிருக்கிறது. அவற்றை நாடாளுமன்றத்தில் வைக்காமலேயே அவசர சட்டம் மூலம் அமுலாக்க, மத்திய அரசாங்கம் முயன்று கொண்டிருக்கிறது.

8 மணி நேர வேலைக்கு ஆபத்து

8 மணி நேர வேலைக்காக போராட்டம் நடத்தி, அதற்காக தம் இன்னுயிரை ஈந்த தியாகிகள் நினைவாகவே உலகம் முழுவதும் மே தினம் கொண்டாடப்படுகிறது. அந்த எட்டு மணி நேர வேலை என்பதையே திருத்தி, எத்தனை மணி நேர வேலை என்பதை அவ்வப்போது அரசு முடிவு செய்யும் என்று சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதனை அமுல் நடத்துவ தற்காகவே, அவசர அவசரமாக முயற்சிக்கிறார்கள்.

குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள், இனி நாளொன்றுக்கு 12 மணி நேர வேலை என உத்தரவிட்டுள் ளன. இது போதாதென குஜராத் முதலாளிகள் சங்கம் அர சாங்கத்துக்கு இரண்டு கோரிக்கைகளை வைத்திருக்கிறது. ஓராண்டுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்றும் நிரந்தர, கேஷுவல், காண்ட்ராக்ட் தொழிலா ளர்கள் எல்லோருக்கும் அந்தந்த மாநிலத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் கொடுக்கப்படும் சம்பளத்தை மட்டுமே  வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அரசைக் கோரியி ருக்கிறார்கள்.

ரூ.10 லட்சம் கோடியை  சூறையாட சூழ்ச்சி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 10 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. அந்தத் தொகையை முதலாளிக ளுக்கு கடனாக கொடுத்து, அதிலிருந்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது என்ற திட்டம் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கு  தொழிலாளி வாங்கியுள்ள கடன் தொகைகளை எல்லாம் கட்டிவிட வேண்டும்.  அவரது பிஎஃப் கணக்கில் உள்ள தொகை எவ்வளவோ அதுவரைக்கும் தான் சம்பளம் தரப்படும். தொழிலாளர்கள் அவர்களது வியர்வையாலும் இரத்தத் தாலும் உருவாக்கி, எதிர்காலத்திற்கு சேமித்து வைத்துள்ள தொகையைச் சூறையாடுவது அயோக்கியத்தனமாகும்.  இதுபோலவே இஎஸ்ஐ  பணத்தை எடுத்து  சம்பளம் கொடுக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. முதலாளியி டம் வேலை பார்த்துவிட்டு லோக்கல் ஆபிசில் போய், தொழி லாளர்கள் தம் பணத்தையே சம்பளமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம் 45 ஆண்டு களுக்கு முன்பு இருந்த நிலைக்கு உயர்ந்துவிட்டது. உலகி லேயே விகித அளவில் அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா. வேலை கிடைக்காமலும், ஏதேனும் வேலை செய்தா லும் வாழ்க்கையை நடத்துவதற்கான போதிய சம்பளம் கிடைக்காமலும் விரக்தியின் விளிம்புக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டு இருக்கின்றனர். இவர்களுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டு அது குடிநோயாக மாறி இருக்கிறது. சமூக விரோதச் செயல்களுக்கும், மதவெறி, சாதிவெறி கும்பல்களுக்கும் சிந்தனையே இல்லாமல் அடியாட்களாக மாற்றுவதற்கு இந்த விரக்திதான் வழி அமைக்கிறது.

உலகிலேயே அதிகமான மக்கள் பட்டினி கிடக்கும் 15 நாடு களில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. கல்வியும் மருத்துவ மும் வணிக மயமாகி, சாமானிய மக்களுக்கு எட்டாத உயரத்துக் குப் போய்விட்டன. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் கூடிக்கொண்டே செல்கின்றன. இனிமேலும் விவசாயம் செய்ய முடியாது என அஞ்சி உயிரை மாய்த்துக் கொள்வது, நகரங்க ளுக்கு ஓடிவந்து கூலிகளாக மாறுவது என கிராமப்புற பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக சிதைந்து விட்டன.

அரசோச்சும் கொடுங்கோன்மை

ஆனால் இந்த பிரச்சனைகளை எல்லாம் பின்தள்ளி விட்டு, எதைப் பேசினாலும் அதை மதத்தோடும்,  தேசபக்தியோடும் சம்பந்தப்படுத்தி, மக்களின் கவனத்தையும் கோபத்தையும் மடைமாற்றும் செயல்களில் ஆர்எஸ்எஸ்-பாஜக சங்பரிவாரக் கும்பல் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே ஜனநாயக அமைப்புகளை எல்லாம் அது தடம் புரட்டி விட்டது. கேள்வி கேட்பாரற்று தான் சொல்வதே சட்டமாக, சர்வாதிகார நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எதிர்த்து கருத்து சொல்பவர்களை பாகிஸ்தான்காரன் என்றும், முஸ்லிம்களுக்கு வால் பிடிப்பவன் என்றும் தேசப்பற்று இல்லாதவன் என்றும் வண்ணம் பூசுகின்றனர்.

இந்தக் கும்பலி டம் கூலி பெற்றுக்கொண்டு, வலைத்தளங்களிலும் ஊடகங்க ளிலும்  சொல்லக் கூசும் ஆபாச சொற்களில், கொச்சைப்படுத்தி எதிர்கருத்து சொல்வோர் மீது தாக்குதல் நடக்கிறது. சமூ கத்தின் முன்பு இத்தகைய அவமானத்துக்கு உட்பட வேண்டாம் என்று அஞ்சி ஒதுங்க தக்கதாக வன்மத்துடன் தாக்குதல் நடத்தப்படுகிறது.  பச்சைப் பொய்கள், கொஞ்சம் உண்மையும் ஏராள பொய்களுமாக புனையப்பட்ட  கதைகள், தனிநபர் தாக்குதல், போட்டோஷாப் மூலம் பதிவேற்றப்படும் பொய் ஆதாரங்கள், அதிகாரத்தால் அச்சுறுத்தி இந்தக் கும்பல்க ளின் பொய் கதைகளையே ஊடகங்கள் மூலமாக ஒளிபரப்ப வைத்தல், பாதிப்புக்கு உள்ளானவர்கள் மீதே வழக்குப் போட்டு தண்டித்தல்,  கொலை பாதகங்கள் செய்வோருக்கும், காமுகர்க ளுக்கும்   தேசியக் கொடியை ஏந்தியபடி பகிரங்கமாக ஆதரவு தருதல், சட்ட நடவடிக்கைகளை சீர்குலைத்தல் என்று கொடுங்கோன்மை அரசோச்சுகிறது.

தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக, மத்திய அரசின் துணையை நாடிய மாநில ஆளுங்கட்சியான அதிமுக தனது தடத்தைத் தொலைத்துவிட்டது.   திராவிட இயக்க பாரம் பரியங்கள் அனைத்தையும் முற்றாக தொலைத்துவிட்டு முழு ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளையாக மாறியிருக்கிறது. 

சீர்குலைந்த தொழிலாளர் துறை 

 தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை ஒட்டுமொத்தமாக சீர்குலைந்து விட்டது. கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழி லாளர் நல வாரியங்களில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கி றார்கள், அதில் எத்தனை பயனாளர்களுக்கு எவ்வளவு ரூபாய் நிதி பலன் கொடுக்கப்பட்டது என்று அறிவிப்பது மட்டுமே தொழி லாளர் துறை  வேலையாக குறுக்கப்பட்டு விட்டது. இந்த ஊரடங்கின் போதுகூட முதலாளிகளை அழைத்து பேசுகிற முதலமைச்சரும், அதிகாரிகளும், தொழிற்சங்க முறையீடுகளுக்கு செவிசாய்க்கவில்லை.

ஊரடங்கினால் இலட்சக்கணக்கான அமைப்புசாரா மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.  வாழும் மனிதர் அனைவருக்கும் சோறிட வேண்டிய அரசாங்கம், வாரிய அட்டை எங்கே, குடும்ப அட்டை எங்கே என்று கேட்டு புதுப் பிக்கப்பட்ட அட்டை  இருப்பவர்களுக்குத்தான் உதவி என்று சொல்வது ஆட்சி நெறி பிறழ்ந்ததாகும்.

‘தினக்கூலி தெய்வங்கள்!’

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் செவிலியர், மருத்துவ துப்புரவு பணி யாளர்களுக்கு, பாதுகாப்பு உடை முகக்காப்பு மட்டுமல்ல, நல்ல உணவும் குடிநீரும் வழங்கக் கூட அக்கறையற்ற அரசு இது. அவர்கள் வேலை நிறுத்தம் செய்த பிறகு, உங்களை அரசே தெய்வமாகக் கருதுகிறது என்று முதல்வர் சொன்னார்.  துப்புரவு தொழிலாளி என்பது நன்றாக இல்லை என்பதால் இனி “தூய்மைக் காவலர்கள்” என்று அழைக் கப்படுவார்கள் என அறிவித்தார். தூய்மை காவலர்களாக பணிபுரியும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெய்வங்கள், பதினைந்து இருபது ஆண்டுகளாக தினக்கூலி தெய்வங்க ளாகவே இருப்பதைத் தீர்ப்பதற்கு அவர் சுண்டு விரலையும் அசைக்கவில்லை.

மத்திய - மாநில அரசுகள், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் முற்றாக இறங்கியிருக்கும் இச்சம யத்தில், ஜனவரி எட்டாம் தேதியன்று அனைத்து தொழிற் சங்கங்களின்  அறைகூவலை ஏற்று 25 கோடி தொழிலாளர் கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். தனியார்மயத்தை எதிர்த்து பாதுகாப்புத் துறை ஊழியர்கள் ஒரு மாதம் கூட வேலை நிறுத்தம் செய்ய தயாராகி களம் புகுந்தனர். ஐந்து நாட்களுக்குள்ளாகவே அரசாங்கம் அவர்களை அழைத்து, தன் நிலையை அப்போதைக்கு மாற்றிக் கொள்வதாக உறுதி அளிக்க வேண்டி வந்தது.  வங்கி ஊழியர்கள் தமக்கு  வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வுக் காக தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்கள். இவையெல்லாம் நம்பிக்கையின் மின்னல் கீற்றுகளாகும்.

எழுந்துள்ள கடுமையான சூழல் புதிய வாய்ப்புகளை தரும். கரும்பாறைகளிடையே வேர்விட்டு மரங்கள் வளர்வதைப் போல, இந்தக் கொடூரச் செயல்பாடுகளுக்கு மத்தியில் தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து போராடி தன் உரிமைகளை மீட்டெடுக்கும். உலக வரலாறு நமக்கு இதைத்தான் போதிக்கிறது.

இன்றைய நாளில்....

இந்த மே தினத்தில் தொழிலாளர் உரிமை ஒற்றுமையை கட்டிக் காக்கவும், அரசாங்கத்தின் முரட்டு தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடிக்கவும், புதிய விடியலை நோக்கி முன்னேறவும், உளத் தூய்மையோடு ஒன்று சேர்ந்து போராடுவோம் என இந்த மே தினத்தில் உறுதியேற்போம்.

ஊரடங்கை மிகச்சரியாக கடைப்பிடிக்கும் கடமை நமக்கு இருக்கிறது. எனவே இந்த மே தினத்தன்று பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. ஊரடங்கு முடிந்த பிறகு வேறு ஒரு நாளில் நடத்துவதற்கான வாய்ப்பை பற்றி பின்னர் யோசிக்கலாம். நமது அலுவலகங்களிலும், நமது உறுப்பினர்களின் வீடுகளிலும் சமூக விலகலைக் கடைப்பிடித்து ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு மே தினத்தன்று,  காலை ஒன்பது மணியளவில் கொடியேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

ஆலைகள் மற்றும் பணிபுரியும் நிறுவனங்கள் உள்ளிட்ட வாய்ப்புள்ள இடங்களில், நான்கு பேருக்கு மிகாமல் சென்று கொடியேற்ற கேட்டுக்கொள்கிறோம்.






 




 





 

;