தெலங்கானாவில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து நீதிவிசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கனாவில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் எரித்துக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் லாரி ஓட்டுநர் உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த 6ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட4 பேரையும் சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்சென்றபோது அவர்கள் தப்பிக்க முயன்றதாக கூறி காவல் துறையினர் சுட்டுக்கொலை செய்தனர். காவல் துறையினரின் நடவடிக்கைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் என்கவுண்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புகர் தலைமையிலான 3 பேர் குழு விசாரணை நடத்தும் எனவும், இந்த விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உச்சநீதிமன்ற உத்தரவு இல்லாமல் வேறு நீதிமன்றமோ, அமைப்போ இந்த சம்பவம் குறித்து விசாரிக்க கூடாது எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.