காலத்தை வென்றவர்கள்
பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார். ஆனால் அது அவரை சுதந்திரப் போராட்ட வீரராக்கியது இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார். அங்கு அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். வ.வே.சுவும் துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். மற்ற புரட்சி இளைஞர்களுக்கும் அப்பயிற்சியை அளித்தார்.
இதே ஆண்டில் கர்னல் கர்ஸான் வில்லி லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா. அவரை இந்த வீரச் செயலுக்குத் தயார் செய்தவர் வ வே சு. பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்ததால் அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. வ.வே.சு சீக்கியர் போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார். 1910 அக்டோபர் 9ல் வ.வே.சு. புதுச்சேரி வந்தார். மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி, வ.ரா. போன்ற மற்ற வீரர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராடினார். இங்கும் வ.வே.சு. இந்தியா பத்திரிகைக்கு தொடர்ந்து எழுதி வந்தார்.
முதல் உலகப்போர் முடிந்ததும், வ.வே.சு பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப்பட்டார். 1920ல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். இராஜதுவேஷ குற்றம் சாட்டி பெல்லாரி சிறைக்கு அனுப்பியது எதேச்சதிகார ஆங்கிலேய அரசு. மகாகவி பாரதியார் தலித்தாகப் பிறந்த ரா.கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த புரட்சிகர நிகழ்வைத் தலைமை தாங்கி நடத்தினார் வ.வே.சு.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.குளத்தங்கரை அரசமரம் என்கின்ற பெயரில் சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன்முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதையாகும்.இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும். மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, “கம்பராமாயணம் - ஓர் ஆராய்ச்சி” போன்ற நூல்களை எழுதியுள்ளார். பாரதி எனும் மாபெரும் கவிஞரின் பெருமையை அக்காலத்திலேயே அறிந்து அவர் கவிதைகளை முக்கிய ஆக்கங்களாகக் கருதிச் சில திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்திலேயே பதிவு செய்தார். 1925 சூன் 4 அன்று அருவியில் விழுந்த மகளைக் காப்பாற்ற குதித்த வவேசு ஐயர் அங்கேயே உயிரிழந்தார்.
பெரணமல்லூர் சேகரன்