tamilnadu

கரும்பு நிலுவை தொகையை பெற்றுத்தராத மத்திய, மாநில அரசுகளுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம்

ஈரோடு, ஏப்.14-நாடு முழுவதும் 5 கோடி விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய ரூ.30ஆயிரம் கோடி கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத்தராத மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டுவோம் என விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஈரோட்டில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் நல்லசாமி தலைமை வகித்தார். கரும்பு கட்டுப்பாடு ஆணைப்படி கரும்பு விவசாயிகள் சாகுபடி செய்த கரும்பை அப்பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கொடுக்க வேண்டும். தான் விளைவித்த கரும்பை வெளியில் விட்டால் குற்றமாக கருதப்படுகிறது. சட்டத்தை மதித்து விவசாயிகளுக்கு கரும்பு கொடுத்து வருகின்றனர். ஆனால் ஆலைகள் விவசாயிகளிடமிருந்து கரும்பை பெற்றுக்கொண்டு அதற்கான பணத்தை கொடுப்பதில்லை. ஆலைக்கு கொடுத்த கரும்புக்கான பணத்தை அரசுதான் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால் மத்திய, மாநில அரசுகள் பணத்தை பெற்றுக் கொடுக்காமல் ஆலை நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 5 கோடி கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகங்கள் 30 ஆயிரத்து 336 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. இதை பெற்றுத்தரக் கோரி விவசாயிகள் சங்கங்கள் சார்பில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசுகள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறது வேதனைக்குரியதாகும். குறைந்தபட்சம் தேர்தல் அறிக்கையில் கூட நிலுவைத் தொகை பெற்றுத் தரப்படும் என அறிவிக்கவில்லை. மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்பதோடு தேர்தலில் உரிய பாடம் புகட்டும் என அவர் தெரிவித்தார்.

;