tamilnadu

மத்திய அரசின் தேசிய திறனாய்வுத் தேர்வில் ஈரோடு மாணவ, மாணவிகள் 251 பேர் வெற்றி

ஈரோடு,ஏப்.25-மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வு எழுதிய ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 251 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை இவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் எட்டாம் வகுப்பு அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்குதேசிய திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பை நிறைவு செய்யும் வரை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி தேசிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை எட்டாம்வகுப்பு பயிலும் 6,695 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். ஈரோடு மாவட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளும் இத்தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 251 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் பெருந்துறை ஒன்றியம் வேலம்பாளையம் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 21 பேர் எழுதியதில் 18 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் அடுத்த கல்வியாண்டு முதல் தலா ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட உள்ளது.

;