tamilnadu

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த செவிலியர் மீது தாக்குதல்

ஈரோடு,ஏப். 28-திருமணத்திற்கு மறுத்த செவிலியரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேஉள்ள எரக்கல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ரத்தினம்மாள் (25).இவர் செவிலியர் படிப்பு முடித்துவிட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ரத்தினம்மாளுக்கு திருமணஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. தாளவாடி அடுத்த அருள்வாடி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (29) என்பவருக்கு ரத்தினம்மாளை இரு வீட்டு பெற்றோரும் பேசி முடிவு செய்தனர். இதையடுத்து ரத்தினம்மாள் தனது வேலையை விட்டுவீட்டில் இருந்துள்ளார். இதற்கிடையில்ரத்தினம்மாள் கைபேசியில் நண்பருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த தேவராஜ் ரத்தினம்மாளிடம் யாருடன் கைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டு உள்ளார்.இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபம்அடைந்த ரத்தினம்மாள் திருமணத்தை நிறுத்தி விடுமாறு பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து ரத்தினம்மாளின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தி விடலாம் என தேவராஜ் பெற்றோரிடம் தெரிவித்து விட்டனர்.இந்நிலையில் சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் தேவராஜ் ரத்தினம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நேரத்தில் இங்கே ஏன் வந்தீர்கள் என்று ரத்தினம்மாளின் பெற்றோர் கேட்டனர். அதற்கு தேவராஜ் நான் ரத்தினம்மாளிடம் தனியாக பேச வேண்டும் என்றார். அதற்கு அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால்கோபமடைந்த தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அருகிலிருந்த ரத்தினம்மாளின் முதுகுப் பகுதியில் குத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தேவராஜை மடக்கி பிடித்தனர். படுகாயமடைந்த ரத்தினம்மாள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து ரத்தினம்மாளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தாளவாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;